கடந்த ஆட்சியில் நிலக்கரி மாயம்.. விசாரணை அறிக்கை சமர்பிப்பு.. விரைவில் நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 June 2022, 7:03 pm
Senthil Balaji- Updatenews360
Quick Share

கடந்த கால ஆட்சியில் நிலக்கரி மாயமானது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி விசாரணை அறிக்கையை தந்துள்ளதாகவும், விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வாயலூரியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் உதய் அனல் மின் திட்டம் இரண்டு அலகுகளில் தலா 660 மெகாவாட் வீதம், மொத்தம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான புதிய மின் நிலையம் கட்டுமான பணிகள், கடந்த 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சுமார் 7ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், இதனை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு, மின்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :- கடந்த 2018 ஆம் ஆண்டு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு இருக்க வேண்டிய நிலையில், தற்போது வரை 53 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் அலகிலும், ஜீன் மாதம் 2வது அலகிலும் மின்உற்பத்தி துவங்கப்படும். ஓராண்டு காலத்தில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக தொழில் நிறுவனங்களுக்கு உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க 6220 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

நிலக்கரி இல்லாத காலகட்டத்தில் 25% ஆயிலிலும், 75 சதவீதம் நிலக்கரி கொண்டும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த நிலை இல்லை. கடந்த கால ஆட்சியில் நிலக்கரி மாயமானது குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையை குழு தந்துள்ளது. விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஓராண்டில் நிலக்கரி முறையாக தரப்பட்டு உள்ளது.

நிலக்கரி மாயமானது குறித்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு கொடுக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பழைய மின் நிலையங்களில் சாம்பல் கழிவு வெளியேறும் குழாய்களில் உடைப்பு ஏற்படுவது, பைக் கார் போன்று பழுதாகி வருவது போன்றுதான்.

மின் நிலையத்தில் சாம்பல் கழிவு குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். இந்தியாவிலேயே தமிழகம்தான் நிலக்கரி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து வருகிறது. இரண்டு கப்பல்களில் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது, எனக் கூறினார்.

Views: - 391

0

0