அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் வெளியான திடீர் பதிவு ; குழம்பிப் போன தொண்டர்கள்… பின்னர் வெளியான உண்மை..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 10:26 am
Quick Share

சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-

தமிழகத்தில் உள்ள அமைச்சர்களில் முக்கியமானவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர், தனது துறை ரீதியான அறிவிப்புகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளபக்கமான டுவிட்டரில் பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கின் பெயர், Variorius (@V_Senthilbalaji) என்று மாற்றப்பட்டு. ஒரு பதிவு வெளியானது.

அதில், ”அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கவுண்டில் இருந்து இப்படி திடீரென இப்படியொரு பதிவு வந்திருக்கிறதே என்று பலரும் யோசித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அடுத்து ஒரு டிவிட் பதிவு வெளியானது. அதில், ”கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!” என்று இருந்தது. மேலும் கிரிப்டோ முகவரி என ஒன்று பதிவிட்டு இருந்தது.

மேலும், அவரது அக்கவுண்ட் பக்கத்தில் ஏற்கனவே இருந்த மின்சாரத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் போன்ற பெயர்களையும் ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர். இதன்மூலம், அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் இணையதள பக்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட பிறகு ”பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள், பிரதமரின் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தனர்” சிறிது நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட்ட அக்கவுண்ட் மீட்கப்பட்டது.

பிரபலமான அரசியல் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து பிட்காயின் சம்பந்தப்பட்டவர்கள் ஹேக்கிங் செய்து வருவது அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 142

0

0