நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அமைச்சர்கள்… திமுக அரசில் திடீர் சலசலப்பு…? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலி…!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 5:51 pm
Quick Share

பனிப்போர்

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜனுக்கும், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கும் மறைமுகப் பனிப்போர் நடப்பது அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம். இருவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சியினரிடம் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்ற போட்டியால் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து.

தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இதுபோல அமைச்சர்களிடையே யார் பெரிய அண்ணன்?…என்ற கெளரவ பிரச்சனை இயல்பாகவே காணப்படும் ஒன்றுதான்.

இதனால் முதலமைச்சரிடம் யாருக்கு நெருக்கம் அதிகம் என்பதை வெளிக்காட்டிக் கொள்வதிலும் அவர்களுக்கு இடையே போட்டா போட்டியும் நடக்கும்.

என்ற போதிலும் ஒருவருக்கொருவர் இன்னொரு அமைச்சரின் இலாகவை பற்றி கடுமையான விமர்சனங்களை வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அது முதலமைச்சருக்கும், கட்சிக்கும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால்!

கூட்டுறவுத்துறை மீது விமர்சனம்

இந்த நிலையில்தான் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன், அமைச்சர் ஐ பெரியசாமியின் கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விமர்சித்து இருக்கிறார்.

மதுரையில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிடிஆர். தியாகராஜன் பேசும்போது “கூட்டுறவு துறையின் செயல்பாடு, கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாகத்தான் உள்ளது. ஆனால் கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்படுவது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல செய்திகள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடக்கின்றன. கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை” என்று குறிப்பிட்டார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் பெரும் விவாத பொருளாக ஆகிவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது?”என்று மனம் நொந்து பேசியதை நினைவு படுத்துவதாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

அவசியம் கிடையாது

பி டி ஆர் தியாகராஜன் குற்றம் சாட்டிய சிறிதுநேரத்திலேயே, கூட்டுறவுத் துறையை கவனித்து வரும் ஐ பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது அதை மறுத்தார்.

அவர் கூறுகையில், “வெளிப்படை தன்மை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகிறது.  அவை எங்கே நடக்கிறது என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? எனக்கும், இங்கே என்னுடன் இருக்கும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிக்கும், 7 கோடி தமிழக மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்தி படுத்தவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் 50 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன். அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார்.

I Periyasamy - Updatenews360

எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை மக்களின் கைகளில் கொண்டு போய் சேர்க்கவேண்டும். அதுதான் எங்களது முதல் வேலை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் அவர்கள் திருப்தி அடைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மக்களுக்கான துறை. உணவுப்பொருள் வழங்கல் துறையும் அதற்காகவே உள்ளது. ரேஷன் கடை பக்கமே போகாத தியாகராஜன்
திருப்தி அடையவில்லை என்றால் எனக்கு கவலையில்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. சுய லாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தவர்கள். ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் யாரிடமும் நாங்கள் பாகுபாடு காட்டவில்லை” என்று ஆவேசமாக கொந்தளித்தார்.

பி டி ஆர் தியாகராஜனின் குற்றச்சாட்டும், அதற்கு ஐ பெரியசாமி அளித்த பதிலும் திமுக தலைமைக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இது ஒரு இக்கட்டான சூழல்தான்
என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

புதிய தலைவலி

“அமைச்சர் பி டி ஆர் தியாகராஜனுக்கும், மூர்த்திக்கும் இடையே பிரச்சனை உருவானபோதே முதலமைச்சர் ஸ்டாலின் அதைக் கவனித்திருக்கவேண்டும்.
ஏனென்றால் தலைவர் பலமுறை அழைத்ததால்தான், நான் அரசியலுக்கே வந்தேன். சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் என்று அமைச்சர் தியாகராஜன் வெளிப்படையாகவே முன்பு பேசியிருக்கிறார்.

தவிர தற்போதுள்ள நிதி நெருக்கடியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் அவர் முன்பு உறுதிப்பட கூறி இருக்கிறார். எனவே அவர் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தக் கூடியவர் என்பது தெரிகிறது.

அதேநேரம் மாநிலத்தின் நிதியமைச்சர் என்பதால் அவரிடம் மற்ற துறையை சார்ந்த அமைச்சர்கள் தங்களது இலாகாக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கும் நிலையும் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட துறைகளில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்ட நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தயக்கம் காட்டுவதில்லை என்பதை அவருடைய பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

CM Stalin - Updatenews360

அதனால்தான் கூட்டுறவுத் துறையில் தினமும் கடத்தல், ரெய்டுகள் அதிகரிப்பதாக செய்திகள் வருகிறது என்றும் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேசமயம், ரேஷன் கடை பக்கமே போகாத தியாகராஜன் திருப்தி அடையவில்லை என்றால் எனக்கு கவலையில்லை. சுய லாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை என்று ஐ பெரியசாமி கூறி இருப்பதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

திமுக அமைச்சர் ஒருவரே கூட்டுறவுத் துறையில் கடத்தல் நடக்கிறது என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது குற்றம் சாட்டுவது திமுக வரலாற்றில் இதுவரை கேள்வி படாத ஒன்று. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கூட அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் இப்படி பேசியதில்லை.

இதனால் மறைந்த கருணாநிதி அளவிற்கு அமைச்சர்களையும் தனது கட்சியினரையும் முதலமைச்சர் ஸ்டாலினால் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லையோ என்ற எண்ணம்தான் அனைவரிடமும் ஏற்படும். ஒவ்வொரு துறை அமைச்சரையும் சுதந்திரமாக செயல்பட ஸ்டாலின் அனுமதித்திருக்கிறார், அதனால்தான் அமைச்சர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள் என்று என்னதான் காரணங்கள் கூறினாலும் அமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் மோதல் போக்கு தனது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தியை கடந்து, தற்போது பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லைச் சேர்ந்த அமைச்சர்களான ஐ பெரியசாமி, சக்கரபாணி என்று விரிவடைந்து கொண்டே போகிறது.

இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 309

0

0