மரணத்தில் மர்மம்.. 5 நாட்களாக எந்த பாதிப்பும் இல்லையா? முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை டவுட்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 6:07 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், எலி மருந்து சாப்பிட்டதால், இன்று காலை உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

கடந்த 19 அன்று அவர் கைது செய்யப்பட்டதும், தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, அவர் எலி மருந்து சாப்பிட்டது குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. அவரது உடல் நலனும் எந்த பாதிப்புக்குள்ளானதாகத் தெரியவில்லை.

அவர் கைது செய்யப்படப்போவதை அறிந்ததும், கடந்த 16 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல், செய்திகள் வெளியாகின. இன்று காலை, அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுபவர், நேற்று மாலை வரை, ஐந்து நாட்களாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவர் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானதும், சந்தேகத்தை எழுப்புகிறது.

கால் உடைந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, ஐந்து நாட்களாக, உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா?

கடந்த ஜூலை மாதம், சிவராமன், எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுப்படுகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Police filed case on Isaivani Complaint கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
  • Views: - 199

    0

    0