தமிழகத்திற்கு நிதி வேணுமா? நாங்க சொல்றத செய்யுங்க.. அழுத்தம் கொடுக்கும் பாஜக.. அமைச்சர் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 1:22 pm

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் தகப்பனார் பொய்யாமொழியின் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநகரச் செயலாளர் மதிவாணன் உட்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அனைவருக்கும் கல்வி திட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கீடு தொகை, 573கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கவில்லை. இது குறித்து முதல்வரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பு மத்திய அரசை வலியுறுத்தி விட்டு சென்றார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், தமிழக எம்பிகள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தோம்.

அப்போதும் இந்த கோரிக்கை குறித்து நேரில் வலியுறுத்தினோம். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று நேரடியாக வலியுறுத்தினோம்.

ஆனால் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்த பணத்தை வழங்க முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி திட்டம், 2018ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டு விட்டது. எனவே இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நிதியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனாலும், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது.

மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!