நீட் தேர்வு விலக்கு மசோதா… ஆளுநரின் மொத்த மதிப்பீடு தவறு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு… பாஜக வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
8 February 2022, 11:19 am
Quick Share

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்த விவாதம் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரில் நடந்து வருகிறது.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, ஏகே ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு பரிந்துரை குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்வி மற்றும் கருத்துக்களுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள். தனியார் பயிற்சி மையங்களில் வெற்றி பெறுவோர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நீட் விலக்கு மசோதா முன்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது சட்டப்பூர்வமானது. நீட் விலக்கு மசோதாவை பரிந்துரைத்த நீதியரசர் ஏகே ராஜன் குழு குறித்த ஆளுநர் தெரிவித்த கருத்து தவறானது. ஏகே ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் பரிந்துரை செய்யவில்லை.

ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை சுட்டிக்காட்டுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மரபும் அல்ல. நீட் விலக்கு மசோதா குறித்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் மொத்த மதிப்பீடும் தவறானது.
சட்டப்பேரவையில் சட்டமே இயற்றக் கூடாது என்ற தீர்ப்பை ஆளுநர் மேற்கோள்காட்டினால் எப்படி ஏற்பது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை பாஜக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பாக பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அப்போது, இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், பாஜக உறுப்பினர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்யலாம் என்று அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாகக் கூறி பாஜக மீண்டும் வெளிநடப்பு செய்தது.

Views: - 1075

0

0