சத்தமில்லாமல் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறதா தமிழக அரசு..? பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவால் சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 1:51 pm
Quick Share

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, அதில் உள்ள திட்டங்களை அமல்படுத்த உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 1986-க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. இந்தக் கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த அதிமுக அரசும் மற்றும் தற்போதைய திமுக அரசும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இருப்பினும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், அதில் உள்ள அம்சங்களையும் அனைத்து மேடைகளிலும் விளக்கி வருகின்றனர். இருப்பினும், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது தி.மு.க அரசு.

இப்படியிருக்கையில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு சத்தமில்லாமல் அமல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, தகைச்சால் பள்ளி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டங்கள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த அம்சங்களை பெயர் மாற்றம் செய்து திமுக அரசு நாடகமாடுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இலவச மதிய உணவுத் திட்டம், காலை உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்ற அம்சம் தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் விதமாகவே, அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.

மேலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள, வயது வந்தோருக்கான ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ (New India Literacy Programme) என்ற திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

2027-ம் ஆண்டுக்குள் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட 5 கோடி பேருக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதே புதிய பாரத எழுத்தறிவு திட்டமாகும். அதன்படி, தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பை பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர் குப்புசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 365

0

0