மழை நீர் தேங்கவே தேங்காது… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2024, 8:01 pm

வடகிழக்கு பருவமழை துவங்கும் போதெல்லாம் சிங்காரச் சென்னை சீரழியும் சென்னையாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், கனமழையால் சென்னை மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் வரும் காலத்தில் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வெள்ளத்தைத் தடுப்பது குறித்து முக்கிய ரிப்போர்ட் ஒன்று சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாகக் கொட்டிய கனமழையால் சென்னை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். பட்டது போதும் மழையாலே..பட்டினத்தார் நிலை எதனாலே என பருவ மழை நொந்து கொண்டவர்களும் உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகள் தான் இதில் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போராடி வருகின்றன. இதற்கிடையே நகரில் என்ன பிரச்சினை உள்ளது, அதை நிரந்தரமாகச் சரி செய்வது எப்படி என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் வழக்கமான அளவை காட்டிலும் கூடுதல் மழை சென்னையில் பெய்துள்ளது. வழக்கமாக 305.5 மிமீ மழை பெய்யும் நிலையில், இந்தாண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 459.7 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால், தென்மேற்கு பருவமழை என்பது எப்போதும் பரவலாக இருக்கும். இது ஓரிரு நாட்களில் கொட்டும் கனமழையாக இருக்காது பரவலாகப் பெய்யும். இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் மாநகராட்சி சமாளித்துவிட்டது.
ஆனால் வடகிழக்கு பருவமழை என்பதும் மொத்தமாக வேறு.

இதில் குறுகிய காலத்தில் கனமழை கொட்டும். எனவே, சென்னையில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிப்பது தான் சவாலானது. கடந்த காலங்களில் கழிவுநீர் பாதைகளில் ஏற்பட்ட அடைப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது. இந்த முறை மீண்டும் அதுபோல நடக்காமல் இருக்க மாநகராட்சி முழுவதும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த தன்னார்வலர்கள் மிக்ஜாம் புயல் சமயத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

எந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கிறது, இதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவான ரிப்போர்ட்டையும் சமர்ப்பித்துள்ளனர். தென்சென்னையை விட வடசென்னையில் தான் மழை தேங்கி இருக்கிறது. உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு 2015 டிசம்பர் மாதம் பெய்த மழையைக் காட்டிலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அதிக மழை பெய்துள்ளது. கனமழையுடன் விரைவான நகரமயமாக்கல், போதிய மழைநீர் வடிகால்கள் இல்லாதது, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ள பாதிப்பு மீண்டும் மீண்டும் நடக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

மோசமான நகர்ப்புற திட்டமிடலே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. போதிய மழைநீர் வடிகால் இல்லாதது, மோசமான கழிவு மேலாண்மை சிஸ்டம் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகக் கூறப்பட்டுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, திடீர் நகர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது ஒரு பிரச்சினை என்றால் அதில் கழிவுநீரும் கலந்து விட்டதால் காய்ச்சல், தோல் நோய் ஆகியவையும் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து சில வணிகர்கள் மிக அதிக விலைக்கும் பொருட்களை விற்றுள்ளனர்.
அதாவது போதிய மழைநீர் வடிகால்கள் இல்லாதது, வடிவமைப்பில் உள்ள சிக்கல், பராமரிப்பின்மை, மிஸ்ஸான இணைப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே இரண்டு நீர்த்தேக்கங்களை அமைக்கப் பரிந்துரை அளிக்கப்பட்ட போதிலும், அது இன்னும் அமைக்கப்படவில்லை. அது பாதிப்பை மோசமாக்கியிருக்கிறது. மேலும், கொசஸ்தலையாற்றின் குறுக்கே பணிகள் முழுமை அடையாதது ஆகியவையும் சென்னையில் அடிக்கடி பேரிடர் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

வங்கக் கடலில் புயல்

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இதையடுத்து சென்னையை புயல் தாக்கக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் மழை கொட்டும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடித்துச் சொல்லி இருக்கிறார். சென்னை மேயர் பிரியா உட்பட
நான்கு அமைச்சர்கள் இதற்காக தொடர்ந்து பணிகள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வருவாய் துறை அமைச்சர் கே .கே .எஸ்.எஸ் .ஆர் .ராமச்சந்திரன் கூறும் போது: சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 60,000 தன்னார்வர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் உணவு வழங்கல் என தனி தனி பிரிவுகள் பிரிக்கப்பட்டு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் மாவை மாநில முழுவதும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதிப்பட கூடியிருக்கிறார்.

பொதுமக்கள் பீதி

சென்னையில் மழை தொடர்ந்து பெய்ய இருப்பதால் பொதுமக்கள் பாலுக்கும், தண்ணீருக்கும், உணவிற்கும் அழுத கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு மழை பாதிப்புகளுக்கு அறிவித்த எந்த போன் நம்பரும் செயல்படாமல் போனதால் புலம்பி தவித்தனர். இதே நிலை இந்த ஆண்டு நீடிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அக்டோபர் 16 ஆம் தேதி மிக அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர அறிக்கையின்படி, தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, 14 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 – 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்ககூடும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான நெட் அலர்ட்டும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதற்கிடையில் ஐ.டி . கம்பெனி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என அனைத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன. வரும் 18ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். சென்னை மாநகர முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் உட்பட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை மக்கள் மழையை நினைத்தாலே குலை நடுங்குகிறது. பருவமழை எப்படி அடித்து துவைக்க போகிறதோ. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எப்படி நடிக்கப் போகிறார்களோ என்ற பெருங்கவலை பின்னப்பட்டுள்ளது.

இதற்குக் குறுகிய கால தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வுகளும் உள்ளது.
குறுகிய காலத் தீர்வு என்னவென்றால் தன்னார்வலர்களை அதிகளவில் நியமித்து வாக்கி-டாக்கி மூலம் நிலைமையைக் கண்காணித்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுப்பது. ரிமோட் சென்சிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் எந்த பகுதிகள் பாதிக்கப்படும் என்பதைக் கண்டறிந்து முன்கூட்டியே மக்களை வெளியேற்றுவது, மோட்டர்களை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதலில் திட்டமிடப்படாத நகரமயமாக்கலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு மக்கள் அதிகம் வருவதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தொழில் மண்டலங்களை விரிவுபடுத்த வேண்டும். நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் ,உள்ளிட்ட பல நீண்ட கால தீர்வுகளும் முன்மொழியப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றினால் இனி சென்னையில் நிச்சயம் வெள்ளம் ஏற்படாது. இதுநடவடிக்கை வர வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் மழை வெள்ளத்தில் மீண்டும் சென்னை தத்தளிக்குமா. பொதுமக்கள் கண்ணீர் வடிக்கும் நிலை வருமா..

மக்களைக் காக்கும் விடியல் அரசு… முடியா அரசாக மாறாமல் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 294

    0

    0