சமூக ஆர்வலர் மீது கொலைவெறி தாக்குதல் ; கேலிக்கூத்தான சட்டம்-ஒழுங்கு… திமுக அரசு மீது சீமான் சந்தேகம்..!!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 8:20 am

சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யாமல் கேலிக்கூத்தாகும் இதுபோன்ற கொடுமைகள்தான் திமுகவின் மூன்றாண்டுகாலச் சாதனைப்பட்டியலில் முதலிடம் பெறுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசுத்துறைகளில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராகவும், கனிம வளக்கொள்ளைக்கு எதிராகவும் போராடிய சட்டப்போராளி மீது நடத்தப்பட்டுள்ள இக்கொடுந்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.

மேலும் படிக்க: உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்

திருநெல்வேலி மாநகரில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, முறையாகச் செயல்படாத கல்குவாரிகள், கட்டுக்கடங்காது நடைபெறும் கனிமவளக்கொள்ளை, அதிகாரிகள் புரியும் ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியும், பொதுநல வழக்கு தொடர்ந்தும் போராடி வந்த தம்பி பெர்ட்டின் ராயன் மீது நடைபெற்றுள்ள இக்கொலைவெறித் தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

தம்பி பெர்ட்டின் ராயன் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடத்தப்பட்டு 10 நாட்களாகியும் குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது அரசின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. அரசு அதிகாரிகளின் ஊழல்களுக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆதாரங்களைத் திரட்டியதே அவர் மீதான கொடுந்தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகும். தமக்கு வந்த அச்சுறுத்தல் குறித்து தம்பி பெர்ட்டின் காவல்துறையிடம் முறையிட்டும் அவருக்கு உரியப் பாதுகாப்பு அளிக்காதது ஏன்?

மக்களுக்காகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலர் மீதே பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல் நடைபெறுகிறது என்றால் திமுக ஆட்சியில் குரலற்ற பாமர மக்களின் நிலையென்ன? திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாதா? மீறி கேள்வி எழுப்பினால் பொய் வழக்கு புனைந்து துன்புறுத்துவதும், கூலிப்படையை ஏவி கொல்வதும்தான் திராவிட மாடலா? சட்டம்-ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற கொடுமைகள்தான் திமுகவின் மூன்றாண்டுகாலச் சாதனைப்பட்டியலில் முதலிடம் பெறுகின்றது.

ஆகவே, சமூக ஆர்வலர் தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை அரசு விரைந்து கைது செய்வதோடு, இக்கொடுஞ்செயலைச் செய்வதற்குத் தூண்டியவர்கள் குறித்து அரசியல் தலையீடு இன்றி, நேர்மையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தம்பி பெர்ட்டின் ராயன் விரைந்து நலம்பெற்றுத் திரும்ப விழைகிறேன். தமிழ்நாடு அரசு இனியாவது அவருக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்று மக்கள் உரிமைப் போராளிகள் தாக்கப்படுவது தொடராமல் தடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?