சென்னையில் ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.13,600க்கு விற்பனை: அதிர்ச்சியில் கட்டுமான துறையினர்…கண்டுகொள்ளுமா அரசு?

Author: Rajesh
30 January 2022, 12:18 pm
Quick Share

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.13,600க்கு விற்பனையாவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகள் சில மாதங்களாக இயங்காததால், அரசின் ஆன்லைன் திட்டத்தில் ஆற்று மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குவாரிகளை இயக்கி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்ய தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டது.

அரசின் புதிய விதிகளின்படி, 16 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு லாரிகளுக்கு ஒரு யூனிட் ஆற்று மணல் 1,000 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தொகையை மக்கள் ஆன்லைன் முறையில் செலுத்தி, அதற்கான லாரி விபரங்களை அளித்தால் குறிப்பிட்ட நேரத்தில் மணல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், சந்தை நிலவரப்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு யூனிட் ஆற்று மணல் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், 2.5 யூனிட் அடங்கிய ஒரு லோடு மணல் 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறுகையில், அரசு ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயித்துள்ள நிலையில், தனியார் சிலர் அதே அளவு மணலை, 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கின்றனர். குவாரியில் இருந்து கட்டுமான பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்து செலவு காரணமாக, இந்த விலை என்கின்றனர்.

இதனால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும் என்பதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சராசரியாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள் மக்களுக்கு மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள், எந்தெந்த குவாரிகளில் இருந்து மணல் பெறலாம் என்பதையும், அரசு வரையறை செய்ய வேண்டும்.

அதேபோல, விற்பனை நிலையில், மணல் விலைக்கான உச்சவரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் மணல் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 2273

0

0