பேரவையை அரசியல் பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது : கருணாநிதி பற்றி கூறிய நயினார் நாகேந்திரன்.. சட்டென எழுந்த முதல்வர்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 12:54 pm

பேரவையை அரசியல் பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது : கருணாநிதி பற்றி கூறிய நயினார் நாகேந்திரன்.. சட்டென எழுந்த முதல்வர்!

ஆளுநர் திருப்பிய அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடியது.

முதலில் பாஜக பங்கேற்காது என்ற தகவல் வெளியான நிலையில், நயினார் நாகேந்திரன் அதை மறுத்தார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார், சபாநாயகர் அவர்களே, நீங்கள் இந்த சபை ஆரம்பிக்கும்போதே, மத்திய அரசையோ, ஆளுநரையோ குறைத்து பேசக்கூடாது என்றீர்கள்.

ஆளுநரை பற்றியே பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, அவருக்கு எதிராகவே இங்கு பேசுபவர்களை பேசவிட்டுவிட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். தீர்மானங்கள் என்பது வேறு.. அவைகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்பது வேறு விஷயம்?

இந்த சட்டமன்றம் ஒரு மாண்பும், மரபும் மிக்கது. இதை பொதுக்கூட்டமாக மாற்றிவிடக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.. இங்கு முதல்வர் பேசியிருந்தார்.

ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் நிதானமாக பேசினார். ஆனால், இங்கு பலரும் அப்படியில்லை.. ஆளுநர் குறித்து நிதானமில்லாமல் பேசுகிறார்கள்.

கருத்து வேறுபாடு பல இருக்கலாம்.. ஆனால், வேந்தர்களை நியமனம் செய்வது என்பது, ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கடந்த 1968-ல் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார்.. ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இயற்றப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடானது என்றே நான் நினைக்கிறேன்..

இந்த அரசாங்கம் கூர்மையான போக்கு கடைப்பிடிக்க வேண்டும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார் நயினார் நாகேந்திரன்.

ஆளுநர்தான், துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறாரே என்று நயினார் சொன்னதுமே, திடீரென குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர்கள், அப்போதெல்லாம் அரசுடன் பேசித்தான் துணைவேந்தர்களை நியமிப்பார்கள் என்று விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மீண்டும் திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுடன், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்ற “வார்த்தையையும்” சுப்ரீட் கோர்ட் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும்நிலையில், இன்றைய மசோதாக்களும் ஒப்புதல் தந்தாக வேண்டிய சூழலை, இன்று ஆளுநர் மாளிகைக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!