‘முதல்ல ஆம்புலன்ஸுக்கு வழிவிடுங்க’… பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 5:55 pm
Quick Share

சென்னை : தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அகமதாபாத்தில் நடந்த 36வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 2வது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பின்னர், அதே ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, காந்தி நகர்-அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வருவதை கண்ட பிரதமர் மோடி, உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு உத்தரவிட்டார்.

பின்னர், அந்த ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் தொடர்ந்து பயணத்தை தொடர்ந்தன.

ஆம்புலன்ஸ்-க்கு பிரதமர் மோடி வழிவிட சொன்ன காட்சிகளை பாஜக நிர்வாகி ருத்விஜ் பட்டேல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் “மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரத்திற்கு இடம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 137

0

0