போராடிய இளைஞர்களை பழிவாங்கத் துடிப்பதா..? வழக்குகளை ரத்து செய்து கேங்மேன் வேலையை வழங்குக ; தமிழக அரசு மீது அன்புமணி பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 11:30 am
Stalin Anbumani - Updatenews360
Quick Share

கேங்மேன் வேலைகேட்டு போராடிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பழிவாங்கத் துடிப்பதா? என்றும், வழக்குகளை ரத்து செய்து பணி வழங்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்று பணி அமர்த்தல் ஆணை வழங்கப்படாத 5336 பேருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று கோரி சென்னை கொளத்தூர் தொகுதியிலும், அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் அருகிலும் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி வருவதாகவும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பழிவாங்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மின்வாரிய கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்று, வேலை பெறாத இளைஞர்களின் கோரிக்கை நியாயமானது. கேங்மேன் தேர்வு நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தங்களுக்கு வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. மின்வாரிய தலைமை அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்யவும் முயன்றார்கள். அப்படியானால் அவர்கள் எந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைக் கூட அவர்கள் திடீரென நடத்தி விடவில்லை. 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேங்மேன் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 9613 பேருக்கு 2021-ஆம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மீதமுள்ள 5336 பேருக்கு ஆணைகள் வழங்கப்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்தவுடன் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு பல கட்ட பேச்சுகள், போராட்டங்கள் நடத்தியும் பயன் கிடைக்காததால் தான் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். கருணை காட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள இளைஞர்களை கைது செய்ய அரசு துடிப்பது நியாயமல்ல.

பல ஆண்டுகள் போராடி கிடைத்த வேலை, அதன்பின் நான்காண்டுகள் ஆகியும் கைகூடவில்லை எனும் போது ஏற்படும் மன உளைச்சலையும், துயரத்தையும் துறவிகளால் கூட தாங்கிக் கொள்ள முடியாது. இந்த சிக்கலுக்கு தீர்வு என்பது கேங்மேன் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி வழங்குவது தானே தவிர, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புவதில்லை. அரசின் பணி குடும்ப விளக்கை ஏற்றுவது தானே தவிர அவிப்பது அல்ல. எனவே, போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, அவர்களுக்கு கேங்மேன் பணிக்கான ஆணையை தமிழக அரசு வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 129

0

0