15 தமிழக மீனவர்கள் கைது… சகித்துக் கொள்ள முடியாது : நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுங்க ; அன்புமணி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 March 2024, 1:24 pm

சென்னை ; நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்வாகவே மேலும் 15 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. இந்த உண்மையை தெரிந்திருந்தும் அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல.

இந்தியா – இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் அதையே அறிவுரையாக வழங்கியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!