செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மழையால் சேதம்… சீரமைக்கும் வரை அதுமட்டும் செய்ய வேண்டாம் ; ராமதாஸ் வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 1:09 pm

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான பகுதி அண்மையில் பெய்த மழையில் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. சாலையின் மேற்பரப்பு முற்றிலுமாக சேதமடைந்து விட்ட நிலையில் பல இடங்களில் ஓர் அடி ஆழத்திற்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் செல்லும் இரு சக்கர ஊர்திகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஆனாலும் சாலையை முழுமையாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான சாலையில் ஏற்பட்ட சேதத்தால் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர சிறிய அளவிலான விபத்துகளில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் இந்தப் பகுதியில் பயணிக்கும் ஊர்திகளின் சராசரி வேகம் குறைந்துள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் காரணம் சேதமடைந்த சாலை தான்.

செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நெடுஞ்சாலையை முழுமையாக சீரமைக்காமல் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய முடியாது. எனவே, போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் – வாலாஜா இடையிலான பகுதி கடுமையாக சேதமடைந்திருந்த நிலையில், அது முழுமையாக சரி செய்யப்படும் வரை அந்தப் பகுதியில் முழு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது; அரை சுங்கக்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணையிட்டது. அந்த சாலையை விட செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலை மிக மோசமாக சேதமடைந்திருப்பதால், அது சரி செய்யப்படும் வரை, அந்தப் பகுதியில் சுங்கக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!