இப்படியும் பண்ணுவாங்களா..? தெருநாய் மீது திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் : விலங்கின ஆர்வலர்கள் அதிருப்தி! (Video)

Author: Babu Lakshmanan
16 February 2022, 6:54 pm
Quick Share

தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பியது விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டீக்கடையில் டீ போட்டுக் கொடுப்பது, தோசை சுட்டுக் கொடுப்பது, செருப்பு தைத்துக் கொடுப்பது, சாலைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான முறைகளில் வாக்குகளை சேகரித்தனர். ஒரு சிலர் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய் உள்ளிட்டோர் போன்று வேடமணிந்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் கரந்தை பகுதியில் 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுபவர் சுமதி இளங்கோவன். இவரது தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரம் ஒன்றை, சிலர் நாய் மீது ஒட்டி உள்ளனர்.

தெருத்தெருவாக சுற்றி வந்த அந்த நாய் தன் மீது ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை அகற்ற தரையில் படுத்து புரண்டுகிறது. ஆனாலும் துண்டுபிரசுரம் கீழே விழவில்லை. அந்த நாய் அப்படியே சுற்றி வருகிறது. இதனை செய்தது யார்..? என்ற விபரம் தெரியவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த செயல் விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1062

0

0