ஜல்லிக்கட்டில் அரசியலா?… போலி வாக்குறுதியால் மக்களை ஏமாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா? அண்ணாமலை அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 10:54 am

ஜல்லிக்கட்டில் அரசியலா?… போலி வாக்குறுதியால் மக்களை ஏமாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா? அண்ணாமலை அட்டாக்!

அண்ணாமலை, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், நம் தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இனிதே தொடங்கியுள்ளது.

வரும் நாட்களில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. 2021 தேர்தலின்போது, 511 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை முறையாகச் செயல்படுத்தவில்லை.

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதி எண் 373ல், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறிய திமுக, அந்த வாக்குறுதியை முற்றிலுமாக மறந்து விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தற்போது மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

ஆனால், திமுக, ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 குறித்துப் பேசுவதே இல்லை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியும் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இதுபற்றி கேள்வி எழுப்பி இருந்தார். ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்குவதாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை.

அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோராலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருவதால், ஜல்லிக்கட்டில் அரசியல் செய்யக் கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!