மீண்டும் வந்தது எம்எல்ஏ பதவி.. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக தொடரும் பொன்முடி.. அடுத்தது அமைச்சர் பதவி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 6:42 pm

மீண்டும் வந்தது எம்எல்ஏ பதவி.. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக தொடரும் பொன்முடி.. அடுத்தது அமைச்சர் பதவி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை நிறுத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டின் நகலை இணைத்து தனது பரிந்துரையுடன் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்ட நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக மீண்டும் பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?