விட்டுக் கொடுக்கிறதா காங்கிரஸ்… குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்..? தர்ம சங்கடத்தில் திமுக கூட்டணி கட்சிகள்…!

Author: Babu Lakshmanan
10 June 2022, 2:48 pm
Quick Share

அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ்,
திமுக, மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளிடமும் ஒரு மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது. இத்தேர்தலில் அக்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார்? என்பதுதான், அது.

ஜனாதிபதி தேர்தல்

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து இத் தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஜூலை 25-ம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ramnath govindh - updatenews360

இந்த நிலையில், வரும் 15-ம் தேதி முதல் தொடங்கும் மனு தாக்கல் 29-ந்தேதி வரை நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 2-ந்தேதி ஆகும். தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடத்தப்பட்டு 21-ம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பார்கள். எனினும் நியமன எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அதேபோல் சட்ட மேலவை எம்எல்சிக்களாலும் ஓட்டு போட முடியாது.

இந்த முறை 776 நாடாளுமன்ற எம்பிக்கள், 4,033 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிப்பார்கள்.

சவால்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு முன்னோட்டம் போல் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசும், எதிர்க்கட்சிகளும் இதை ஒரு பெரும் சவாலாகவே எடுத்துக் கொள்ளும் நிலையும் காணப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த எம்பி, எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. இதில் எம்பிக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 43 ஆயிரத்து 200 ஆகும். எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு
5 லட்சத்து 43 ஆயிரத்து 231.

காலியாக இருக்கும் 3 மக்களவை இடங்களுக்கும் 16 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கும் தேர்தல் நடக்க இருப்பதால் இறுதி ஓட்டு எண்ணிக்கை மாறுபடும்.

பாஜக இணக்கம்

இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 லட்சத்து 33 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதாவது வெற்றிக்குத் தேவை 13 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே. இதை எதிர்க்கட்சிகள் அணியில் இல்லாத பிஜு ஜனதா தளம் அல்லது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக இருக்கிறது.

jeganmohan redy - updatenews360

ஏனென்றால் ஒய் எஸ்ஆர் காங்கிரசுக்கு 43 ஆயிரத்து 500 ஓட்டுகளும், பிஜு ஜனதா தளத்துக்கு 31,700 வாக்குகளும் உள்ளன.

மேலும் இந்த இரு கட்சிகளும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே கொண்டுள்ளன. பிரதமர் மோடி வெளிப்படையாக ஆதரவை கேட்டுவிட்டால் இந்த இரண்டு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு தங்களுடைய ஆதரவை அளிக்கும் என்ற நிலையே உள்ளது.

வேட்பாளர் யார்..?

அதேநேரம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும் என விரும்பும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலையோ, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை தங்களது வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

mamata - sonia - updatenews360

ஏனென்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு
2 லட்சத்து 59 ஆயிரம் ஓட்டுகளும், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 2 லட்சத்து18 ஆயிரம் வாக்குகளும் மட்டுமே உள்ளன. அதாவது மொத்தம் 4 லட்சத்து 77 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே எதிர் அணி தரப்பில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.

மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களில் 35 பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு விட்டாலும், அந்தக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் அமோக வெற்றி பெற்று விடுவார்.

இதனால்தான் ஆரம்பம் முதலே குடியரசுத் தலைவர் தேர்தலில், எந்த ஆர்வமும் காட்டாமல் காங்கிரஸ், திமுக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மௌனம் சாதித்து வருகின்றன என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

எந்த தகவலும் இல்லை

தற்போது தேசிய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதற்கேற்ப காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினோய் விஸ்வம் எம்பியிடம் இதுதொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரசில் இருந்தோ பிற எதிர்க்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

திமுகவுக்கு வாய்ப்பு

“குடியரசுத்தலைவர் தேர்தல் உண்மையிலேயே, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அக்னி பரீட்சைதான்” என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“காங்கிரசுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற ஆர்வம் அடியோடு கிடையாது. இதற்கு முக்கிய காரணம் மாநிலக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி ஆகியவை சமீப காலமாக தேசிய அளவில் தங்கள் கட்சிகளை முன்னிறுத்தி வருவதுதான்.
இது காங்கிரசுக்கு கவலை தரும் விஷயமாகவும் உள்ளது.
இதில் மம்தாவையும், அகிலேஷ் யாதவையும் காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்பதால் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்தும் பொறுப்பை திமுகவிடம் தள்ளிவிட காங்கிரஸ் நினைக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் தனக்கு அடுத்த நிலையில் திமுக இருப்பதால் இந்த வாய்ப்பை அக்கட்சிக்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் ஒரு தகவல் உண்டு. இதற்காக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பியின் பெயரை பரிசீலிக்கும்படி சோனியா கூறியிருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

Kanimozhi - updatenews360

ஏனென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே கடும் போட்டியை உருவாக்க முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால் திமுகவோ, தங்கள் கட்சி சார்பில் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருவர் நிறுத்தப்பட்டால் அது 2024 தேர்தலுக்கு தாங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என நினைக்கிறது, என்கிறார்கள். இதை மனதில் கொண்டுதான் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பெயரை திமுக சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் தங்களின் கடும் போட்டியாளராக உள்ள மார்க்சிஸ்ட்டை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்வதில் தர்ம சங்கட நிலை உருவாகலாம்.

இப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் திணறி வரும் நிலையில் அந்த வாய்ப்பு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுத்துக்கு வழங்கப் படலாம். அதே நேரம் 18 எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலோடு ஆதரவு தெரிவித்தால் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. எப்படிப் பார்த்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகுதான் எதிர்க்கட்சிகள் ஒரு உறுதியான முடிவை எடுக்கும். அதுவரை எதிர்க்கட்சிகளின் குழப்பம் நீடிக்கவே செய்யும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் என்ன முடிவு எடுக்கப் போகின்றன?… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 450

0

0