குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் விவகாரம் : ஸ்டாலினை நெருக்கடியில் தள்ளும் திருமா… அதிர்ச்சியில் தமிழக காங்!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 8:04 pm
Thirumavalavan - Updatenews360
Quick Share

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 15-ம் தேதி, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

ஆனால் அவர் அழைப்பு விடுத்த 22 எதிர்க்கட்சிகளில் பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி போன்ற முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

நோ சொன்ன சரத்பவார்

அதேநேரம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்துவதற்கு விரும்பிய மம்தா அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தும் போட்டியிட வலியுறுத்தினார். ஏற்கனவே தனக்கு அதில் விருப்பமில்லை என்று கூறியிருந்த சரத்பவார், மீண்டும் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார்.

பரூக் அப்துல்லாவும் மறுப்பு

இதையடுத்து காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்படி வற்புறுத்தப்பட்டது. ஆனால் அவரோ, “ஜம்மு – காஷ்மீர் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் அங்கு வழிகாட்டுவது என் கடமை. எனக்கு இன்னும் சில ஆண்டுகள், அரசியல் வாழ்க்கை உள்ளது. அதனால், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இயலாது,” எனக் கூறி ஆளை விட்டால் போதும் என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்.

கூட்டத்தில் பல எதிர்க்கட்சிகள் பங்கேற்றாலும், அனைத்தும் ஒன்றாக இணைந்து ஓட்டளிக்குமா? என்ற சந்தேகம், இந்த தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதுடன், அரசியலுக்கு நிரந்தரமாக முழுக்கு போட வேண்டியிருக்கும் என்பதுதான் இவர்களின் நிராகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

காந்தி பேரனுக்கு குறி

இதனால் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரோ, “வரும்போது பார்க்கலாம்” என பட்டும்படாமலும் பதிலளித்து உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.

திருமாவளவன் கோரிக்கை

இதற்கிடையே நான்கு நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு கிறிஸ்தவரை பொதுவேட்பாளராக
நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.கேலியாகவும் பேசப்பட்டது. தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, திருமாவளவனுக்கு ஒரு கிடுக்குப்பிடி கேள்வியையும் எழுப்பினார்.

திருமாவை வெளுத்த பாஜக

“2012-ல் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவரான பி.ஏ.சங்மா குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன், சங்மாவுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறிஸ்தவர் குடியரசு தலைவராக வர வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறிஸ்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறிஸ்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் கைவிட வேண்டும். திருமாவளவன் 2012-ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்?” என்று கேட்டார்.

பொதுவாக பாஜக எழுப்பும் இதுபோன்ற கேள்விகளுக்கு, திருமாவளவன் கொந்தளித்துப் போய் பதில் கூறுவது வழக்கம். ஆனால் இதற்கு அவர் தகுந்த பதிலடி கொடுக்கவில்லை. அவருடைய கட்சியில் வேறு யாரும் கூட வாய் திறக்கவில்லை. அனைவரும் ‘கப்சிப்’ ஆகி விட்டனர். ஏனென்றால் நாராயணன் திருப்பதியின் கேள்வியில் 100% உண்மை இருந்ததுதான்.

மீண்டும் பழைய கோரிக்கை

ஆனால் இப்படி திருமாவளவன் மாட்டிக் கொண்ட போதும்கூட கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, மதுரையில் தற்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தான் வைத்த பழைய கோரிக்கையையே மீண்டும் எழுப்பி இருக்கிறார்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சிதைப்பதற்கு அடித்தளமாக அமைந்து விடும். குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கிறிஸ்தவர் ஒருவரை களம் இறக்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பார் என நம்புகிறேன். ஏனென்றால் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவர் ஆனது இல்லை” என்று ஆதங்கப்பட்டு கூறியுள்ளார்.

இந்த முறை அவர், திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான ஸ்டாலினை இந்த விவகாரத்தில் இணைத்து விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வம்பில் சிக்கிய ஸ்டாலின்

ஏனென்றால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் பிரணாப் முகர்ஜியைத்தான் ஆதரித்தது, என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

“எதற்காக திருமாவளவன் இதே கோரிக்கையை மீண்டும் மீண்டும் எழுப்புகிறார், என்பது புரியாத புதிராக இருக்கிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற முடியாது என்பது தெரிந்தே விசிக தலைவர் இந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு ஏதாவது பின்னணி காரணமும் இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சும் உள்ளது.

அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். அதற்கு திமுக தலைமை தாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று திருமாவளவன் கருதி இருக்கலாம்.

ஏனென்றால் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய அரசியலில் திமுக தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. தங்களது திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுமைக்கும் கொண்டுவருவோம் என்றும் பிரச்சாரம் செய்கிறது. அதை தொடங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.

வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ்?

அதனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸை, தன் மனதில் வைத்து திருமாவளவன் பேசுவது போலவே தோன்றுகிறது.

ஏனென்றால், பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் கூட, ஸ்டாலினை இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ்கிறார் என்று புகழ்ந்தவர்.

தவிர பாஜகவின் வீச்சையும், தாக்கத்தையும் தடுத்து நிறுத்தும் கட்டமைப்பு
திமுகவுக்கே இருக்கிறது. ஸ்டாலினுக்குத்தான் அந்த உணர்வும் இருக்கிறது. அவரது யுக்தி ஆராய்ந்து பார்த்து, செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற யுக்தி. அதைப் பின்பற்றுங்கள் என்றும் காங்கிரசுக்கு அட்வைஸ் கூறியவர்.

அதனால் ஸ்டாலின் மனதில் பீட்டர் அல்போன்சுக்கும் ஓர் இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை எதிரொலிப்பது போலவே திருமாவளவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த முறை எதிர்க்கட்சிகளின் சார்பாக ஒரு கிறிஸ்தவர் நிறுத்தப்பட வேண்டும் என்று பேசியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் பீட்டர் அல்போன்சுக்கு விசிக தலைவருடன் மிக நெருங்கிய நட்பு உண்டு.

அதன் அடிப்படையிலும் திருமாவளவன் அப்படி பேசியிருக்கலாம். அல்லது ஸ்டாலின் மனதில் உள்ளதை அறிந்துக்கொண்டு இதுபோல் அவர் கூறியிருக்கலாம்.

கொந்தளிப்பில் காங்கிரஸ்?

ஆனால் ஏற்கனவே, பீட்டர் அல்போன்சுக்கு மாநில அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றை வழங்கியதால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலர் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுவது உண்டு. அப்படி இருக்கும்போது அவரை எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திமுக சிபாரிசு செய்தால் அதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். அப்படியே வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவானாலும் கூட மனதுக்குள் புழுக்கம் அடையத்தான் செய்வார்கள்.

இதைக்காரணம் காட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

இதனால்தான் திருமாவளவன் எழுப்பும் கோரிக்கையை பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இன்னொரு பக்கம் தனது கோரிக்கையில் ஸ்டாலின் பெயரையும் இப்போது சேர்த்து கூறி இருப்பதால் திமுகவுக்கு திருமாவளவன் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதும் உண்மை.

திருமாவளவனே வேட்பாளராக நிற்க வாய்ப்பு

ஒருவேளை பீட்டர் அல்போன்ஸ் இதற்கு மறுத்து விட்டால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினருடன் மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள திருமாவளவனே கூட எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் நிலையும் உருவாகலாம். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று தன்னை தேசிய அளவில் அவர் பிரபலப்படுத்தி கொண்டும் வருகிறார்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பீட்டர் அல்போன்சின் பெயரோ, திருமாவளவனின் பெயரோ குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் பரிசீலிக்கப்படுமா?.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 527

0

0