இந்தியர்கள் என்பதில் பெருமை… நம் சந்ததிகளுக்காக நாம் இதை செய்தே ஆகனும் ; ரஜினிகாந்த் வேண்டுகோள்..!

Author: Babu Lakshmanan
13 August 2022, 4:17 pm
Quick Share

நாம் இந்தியர் என்கிற பெருமையோடு, அனைவரும் தேசிய கொடியேற்றி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதனை மத்திய அரசு உற்சாகமாகக் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இல்லந்தோறும் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

அதனை ஏற்று, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தேசிய கொடியை ஏற்றி, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்களில் முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாயிலில் தேசியக் கொடியை பறக்க விட்டார். அதேபோல், நடிகர் விஜய்யும், தனது மக்கள் இயக்க அலுவலகத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்தார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை மக்கள் ஏற்றுவதன் அவசியம் என்ன என்பது குறித்தும், மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தும் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியதாவது :- இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள், பல லட்சம் பேர், எவ்வளவோ சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிச்சிருக்காங்க. எத்தனையோ பேர் அவர்களது உயிரையே தியாகம் பண்ணிருக்காங்க.

அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம். நாடு இல்லைன்னா நாம இல்ல, நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமைகொள்வோம். ஜெய் ஹிந்த்” என கூறினார்.

Views: - 488

0

0