ரூ.4 கோடி விவகாரம்.. 3 முறை நிராகரித்த பின் முதன்முறையாக நயினார் நாகேந்திரன் ஆஜர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2024, 12:59 pm

ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுவரை 15 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த 11-ல் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினர். இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவர் ஆஜர் ஆனார். ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
சம்பந்தபட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை வரை நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!