நான் இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது… பிரிந்தவர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.. சசிகலா சபதம்..!!
Author: Babu Lakshmanan12 ஜூலை 2022, 4:30 மணி
அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை, கழக சட்ட திட்டகள் மற்றும் விதிகளை யாருமே மாற்றியது இல்லை என்றும், ஆனால் தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது என தஞ்சையில் சசிகலா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணா திராவிடர் கழகத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதன் தலைவர் திவாகரனின் தலைமையில், சசிகலாவுடன் இணைந்தனர். இதில் பேசிய சசிகலா, அதிமுகவில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு, விதிவசத்தால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் கட்டுக்கோப்பாக இருந்த நமது கழகம் எதிரிகளின் ஆசைப்படி சிதறி போனது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் எத்தனையோ பேர் கட்சியை விட்டு போனாலும், கழகத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் அவர்களை இணைத்துள்ளோம். பிரிந்தவர்களை கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் நம் கட்சிக்காரர்கள் என்று பார்ப்போமே தவிர, அவர் அந்த அணியை சேர்ந்தவர், அவர் இந்த அணியை சேர்ந்தவர் என்று என்றுமே நினைக்கவில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஆனால் அவருக்கு யாரையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அனைவரையும் சமமாக பார்த்தால், யாரையும் துண்டாட மாட்டார். அதைத்தான் அன்றைக்கு நாங்கள் கடைபிடித்தோம். அதில் வெற்றி பெற்றோம். அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கையில் லட்சியமாக கருதுகிறேன்.
பெங்களூரில் இருந்து வந்த நாள் முதல் அனைவரும் ஒன்றிணை செயல்பட வேண்டும் என்ற கருத்தை தான் தற்போது வரை வலியுறுத்தி வருகிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் ஒரு கண்ணியமும், புரட்சித்தலைவி ஜெயலலிதா போல் ஒரு கடமையும் இருக்கும் தான் எண்ணி இந்த இயக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள். தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா. சில சுயநலவாதிகள், தாங்கள் இருக்கும் இயக்கம் எப்பேர்ப்பட்ட இயக்கம்! எப்படிப்பட்ட தலைவர்கள் கொண்ட இயக்கம், நம் தலைவர்கள் பட்ட கஷ்டம் என்ன அவர்கள் செய்த தியாகங்கள் என்ன எத்தனை கழக தொண்டர்கள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள் என்று சிந்திக்காமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, நான் பெரியவன்! நீ பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் என்று எண்ணும்போது, என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் மறைவிற்கு பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக் குழு தான் உண்மையான பொதுக்குழு. அந்தப் பொதுகுழுவிற்கு தான் கழக சட்ட திட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழு அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாக தான் நம் கழகத் தோன்றுகிறார்கள் பார்க்கிறார்கள்.
அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை, கழக சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால் தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு ஏற்படும், நான் இருக்கும் வரை யாராலும் இயக்கத்தை அபகரித்து விடவோ, அழித்துவிட முடியாது.
விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து அனைவரையும் ஒருங்கிணைந்து மீண்டும் நமது இயக்கம் எந்தவித ஜாதி மத பேதமின்றி, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி, அதே மெடுக்கோடும் செடுக்கோடும், புது பொலிவோடும் விளங்கும் என்று உறுதியளிக்கிறேன், என அவர் தெரிவித்தார்.
0
0