சேரிக்கு ‘Sorry’ சொல்லுங்க… நடிகை குஷ்புவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 8:43 pm

சேரிக்கு ‘Sorry’ சொல்லுங்க… நடிகை குஷ்புவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த காங்கிரஸ்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும். மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குஷ்புவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சேரி மொழி என்று எப்படி சொல்லலாம் என்று பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் குஷ்புவை மன்னிப்பு கேட்கச் சொல்லி அறிக்கை விடுத்திருந்த காங்கிரஸ் எஸ்.சி.துறை தமிழக தலைவர் ரஞ்சன் குமார், மாலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், குஷ்புவுக்கு சரமாரி கேள்விகள் எழுப்பியதோடு சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

அதுவும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்த ரஞ்சன் குமார், குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை தாங்கள் முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளார்

மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் கடந்த 2 நாட்களாக பேசப்பட்ட நிலையில் இப்போது சேரி மொழி என்று குறிப்பிட்டு குஷ்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!