கோவிந்தசாமி நகர் மக்களை காப்பாத்துங்க… உச்சநீதிமன்றத்தில் நீங்க உண்மைய சொன்னால் போதும்.. தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
11 May 2022, 4:12 pm

சென்னை : கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயக நாட்டில் எளிய மக்களின் இறுதி நம்பிக்கையாகத் திகழும் உச்ச நீதிமன்றமே மக்களுக்கான உரிய நீதியை வழங்கத் தவறியது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி அவர்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையான பூர்வீக வாழ்விடத்தைத் தமிழ்நாடு அரசு காத்து நின்றிருக்க வேண்டும். அதற்கு மாறாகத் தனிப்பெரு வடநாட்டு முதலாளியின் தன்னலத்திற்குத் துணைபோகும் வகையில் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்ட அதே மக்கள் விரோத அணுகுமுறையையே, தற்போது உச்சநீதிமன்றத்திலும் கையாண்ட காரணத்தினால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் சரியான நீதியைப் பெறமுடியாமல் போய்விட்டது.

நாடு, அரசு, நீதிமன்றம், சட்டங்கள் என்ற அனைத்தும் இந்த நாட்டில் வாழும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. மக்களை மிஞ்சிய உயரிய அமைப்பு எதுவும் இந்த நாட்டில் கிடையாது. எனவே மக்களின் அடிப்படை உரிமையைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுப்பதென்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது.

ஆகவே, கோவிந்தசாமி நகர் மக்களின் தற்போதைய கையறு நிலைக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பேற்று, உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ஐம்பதாண்டு காலமாக அரசால் குடியிருப்பாக அங்கீகரிக்கப்பட்ட வாழ்விடத்திலேயே அம்மக்கள் வசித்து வருகிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றத்தில் உரிய விதத்தில் எடுத்துக்கூறி, மீண்டும் பூர்வீக வாழ்விடத்திலேயே அம்மக்கள் வாழ்வதற்கான சரியான நீதியைப் பெற்றுத் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதுவரை கோவிந்தசாமி நகர் மக்களின் குடியிருப்புகளை இடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கக் கூடாதெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!