என்னை கட்சியில் இருந்து நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை…. நீக்கப்பட்ட நா.த.க பிரமுகர் பதிலடியால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 11:34 am

என்னை கட்சியில் இருந்து நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை…. நீக்கப்பட்ட நா.த.க பிரமுகர் பரபரப்பு அறிக்கை!!

நாம் தமிழர் ஒரு இயக்கமாக இருந்து பின்னர் கட்சியாக உருமாறியது. நாம் தமிழர் இயக்கம், கட்சி என ஒவ்வொரு படிநிலையிலும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பக்க பலமாக இருந்தவர் வெற்றிக்குமரன். இதனாலேயே சீமானின் தென் மண்டல தளபதி என அடையாளப்படுத்தப்பட்டார் வெற்றிக்குமரன்.
நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில்- அதாவது சீமானுக்கு அடுத்த பதவியில் இருந்தவர் வெற்றிக்குமரன். கடந்த சில மாதங்களாக கட்சியிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அண்மையில் மதுரையில் கட்சி சீரமைப்பு பணிகளில் சீமான் பங்கேற்ற போதுகூட வெற்றிக்குமரன் பங்கேற்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் தாம் மதுரையில் பங்கேற்பதாக வெற்றிக்குமரன் அறிவித்திருந்தார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சீமானுக்கு 2 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கும் வெற்றிக்குமரன், அதன் இறுதியில், நீங்கள் என்னை அப்படி எல்லாம் நீக்கிவிட முடியாது; பொதுக்குழு கூடிதான் முடிவு செய்யனும் என குறிப்பிட்டுள்ளதுடன், வெற்றிக்குமரன் – மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி என்றே பதிவும் செய்துள்ளார். இதுதான் இப்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

உலகில் எந்த ஒரு கட்சியும் இல்லாத வகையில், நாம் தமிழர் கட்சியில் “நீக்கப்பட்டோர் பாசறை” என ஒன்று உள்ளது. அதாவது சீமானால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் அமைப்பு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நீக்கப்பட்டோர் பாசறை என்ற பெயரில் கட்சி மாநாடுகளில், கூட்டங்களில் பங்கேற்பது இவர்கள் வழக்கம். இதனை சீமானும் பொது மேடைகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தற்போது வெற்றிக்குமரன், இந்த நீக்கப்பட்டோர் பாசறை பக்கம் திரும்புவாரா? அல்லது நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைத்து தனி இயக்கம் அல்லது கட்சி தொடங்குவாரா? என்பதுதான் அந்த விவாதங்கள். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி பலமுறை பிளவுகளையும் ‘நீக்கங்களை’யும் சந்தித்து உள்ளது.

ஆனால் சீமானுக்கு எதிராக வலிமையான ஒரு இயக்கத்தையும் ‘மாஜி’ தம்பிகள் நடத்தியது இல்லை. திமுக, அதிமுகவில் இணைந்துதான் இருக்கிறார்கள். அதனால் வெற்றிக்குமரன் என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?