அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் சீமான்..? 2024 தேர்தலுக்கு புதிய வியூகம்… ரகசிய பேச்சால் திமுக ‘திக் திக்’..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 9:21 pm
Quick Share

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டன என்பதை அவற்றின் நடவடிக்கைகளின் மூலம் உறுதியாக அறிய முடிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்தே போட்டியிடும் என்று கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் வலியுறுத்தி பேசியதாக கூறப்படும் நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய வியூகங்களும் மெல்ல மெல்ல வெளிவர தொடங்கி இருக்கிறது.

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ள நிலையில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கூட்டணிக்குள் பாமக வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே எச்சரித்து வருகிறார். அக்கட்சி வெளியேறி விட்டால் திமுக கூட்டணி 2019 ல் இருந்தது போல வலுவாக இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக வெளியேறுவது உறுதியாகிவிட்டால் அதிமுக அணி வலு இழக்கும் என்பது உண்மைதான். ஆனால் இதுவரை கூட்டணி முறிந்தது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

பாஜக வெளியேறினால் அதை ஈடு கட்டுவதுடன் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு ஏற்றாற்போல் தனது கூட்டணியை வலிமை மிக்கதாக அமைக்க வேண்டிய நெருக்கடி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

தமிழக பாஜக தனித்துப் போட்டியிடாது என்றாலும் கூட அக் கட்சியின் தலைமையில் அமையும் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி ஓபிஎஸ் அணி போன்றவை இடம் பெறலாம். ஆனால் இந்த கூட்டணியில் பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு எந்த அளவிற்கு வாக்கு சதவீதம் இருக்கும் என்பது கேள்விக்கு உரியது. அவரவர்களுக்கு ஒரு சில நாடாளுமன்ற தொகுதிகளில் வேண்டுமென்றால் செல்வாக்கு இருக்கலாம். ஒட்டுமொத்தமாக 39 தொகுதிகளிலும் ஒரே சீரான வாக்கு வங்கி இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

அதிமுக கூட்டணியிலோ தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் போன்ற சிறு சிறு கட்சிகள்தான் உள்ளன.

அதிமுக வலுவான எதிர்க்கட்சி என்றாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணியை பலப்படுத்தாவிட்டால் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காத நிலை ஏற்படலாம். அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் அதிமுக கூட்டணியை பலமாக கட்டமைக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது.

ஒரு வேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் பட்சத்தில் அதிமுகவை நோக்கி திருமாவளவன் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் பாமக, பாஜக இல்லாத கூட்டணியைத்தான் விசிக விரும்புகிறது.

அதேநேரம் தங்கள் கூட்டணிக்குள் விசிக வந்துவிடும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலையில் அதிமுக இன்னொரு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரின் மூலம் மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இருக்கிறது. இது திமுகவும், பாஜகவும் எதிர்பாராத ஒன்றாகவும் அமைந்து
விட்டது.

இதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சதவீத ஓட்டு மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்கு 4 சதவீதமாக உயர்ந்தது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் இது 6.77 சதவீதமாக அதிகரித்து சுமார் 30 லட்சம் ஓட்டுகளை சீமான் கட்சி அள்ளியது. பாஜக, திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக முதல் தலைமுறை வாக்காளர்களை தன் பக்கம் நாம் தமிழர் கட்சி ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் அக் கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை.

அதேபோல 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய 3 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி தன் பக்கம் இழுத்து விட்டதால்தான் அதிமுக கூட்டணிக்கு கிராமப்புற மற்றும் சிறு நகர தொகுதிகளில் சுமார் 45 இடங்கள் வரை கிடைக்காமல் போய்விட்டது என்பதை அக்கட்சி பிரித்த ஓட்டுகளை வைத்தே கூறிவிட முடியும். சுமார் 100 தொகுதிகளில் அக்கட்சி பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை 2021 தேர்தலில் பெற்றும் இருந்தது.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2016 மற்றும் 2021 தமிழக சட்டப் பேரவை தேர்தல் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் என 2010ல் கட்சி தொடங்கி, தான் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவது என்ற தன்னுடைய கொள்கையில் இருந்து சீமான் ஒருபோதும் விலகியதில்லை.

ஆனால் எல்லாத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவது என்ற முடிவுடன் களமிறங்குவதால் 12 முதல் 15 சதவீத ஓட்டுகளையும், அதன் மூலம் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களையும் பெறுவதற்கே இன்னும் இரண்டு, மூன்று பொதுத் தேர்தல்களை சந்திக்க வேண்டிய நெருக்கடியான நிலை நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்பதை சீமான் நன்கு உணர்ந்தும் இருக்கிறார். அதனால்தான் சமீப காலமாக தனித்துப் போட்டியிடுவது என்ற சிந்தனையில் இருந்து அவர் மெல்ல மெல்ல விலகி வருகிறார், என்கின்றனர்.

தவிர திமுக, அதிமுக என்னும் இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து தனித்து போட்டியிட்டால், தேர்தல் அரசியலில் தற்போதைக்கு பெரிய அளவில் வெற்றி பெற முடியாது, அதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதையும் சீமான் உணர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் தேர்தல் ஆதாயத்திற்காகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காகவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதை உறுதி செய்துகொண்ட பின்புதான் நாம் தமிழர் கட்சியை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக தலைவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மேலும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈழத் தமிழர்களுக்கு திமுகவும், காங்கிரசும் துரோகம் இழைத்து விட்டதாக கூறியும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த இரு தேர்தல்களிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதை சீமானிடம் நினைவுபடுத்திதான் தற்போது அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் இதை மறுக்கின்றனர். “திராவிட மற்றும் தேசிய கட்சிகளோடு எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் ஒருபோதும் மாற மாட்டோம். எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டி என்று ஏற்கனவே அறிவித்து, அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்க பேச்சு நடப்பதாக கூறுவது தவறு” என்கின்றனர்.

இதனால் 2024 தேர்தலில் தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை சீமான் கைவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறாரா? அல்லது தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தேர்தலை தனித்தே எதிர்கொள்ள போகிறாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் அரசியல் விமர்சகர்களின் கணிப்போ சற்று மாறுபட்டதாக உள்ளது.

“கட்சி நிர்வாகிகள் இதுபோல மறுக்கிறார்கள் என்றாலே அதிமுக- நாம் தமிழர் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் தேர்தலுக்கு ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். சீமான் கட்சிக்கு 6 எம்பி தொகுதிகள் வரை அதிமுக தலைமை ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது. விசிகவும் கூட்டணிக்குள் வந்தால் 4 தொகுதிகள் கிடைக்கலாம். அதேநேரம் இந்த கூட்டணி அமைந்தால் திமுகவும், பாஜகவும் உங்களது பிரதமர் வேட்பாளர் யார்?என்ற கேள்வியை எழுப்பும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதே போன்றதொரு கேள்வி எழுந்தபோதுதான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக
37 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை மறந்து விடக்கூடாது. நிச்சயம் இந்த கூட்டணி மிக வலுவான ஒன்றாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்!

Views: - 282

0

0