பதவியை தக்க வைக்க ஜோதிடரின் பேச்சை கேட்டு நடக்கும் CM ஸ்டாலின்… இதுதான் திராவிட மாடலா..? சீமான் அதிரடி…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 5:46 pm
Quick Share

மக்கள் வாழ்விடங்களை இடித்து அகற்றுவது, பசுவிற்கு மடம் கட்டுவது, உயிரிழந்த கோவில் யானைகளுக்கு மண்டபம் கட்டுவது போன்றவை திராவிட மாடலில் வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளரும், ‘சாட்டை’ வலையொலி யூடியூபர் ஊடகவியலாளருமான துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் உயிரிழந்ததாகவும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக காவல் துறையினால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது :- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக குண்டர் சட்டத்தில் துரைமுருகன்கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் என்னையும் அப்படி கைது செய்தார்கள். சத்து இல்லாத ஆவின் பாலை நாங்கள் குடித்துக் கொண்டிருந்தோமா..? முன்பே இதை தெரிவித்திருக்க வேண்டாமா..? ஏன் மறைத்தார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என அரசு தெரிவிக்கின்றது. காவல் நிலைய மரணமே ஓராண்டில் 9 மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. திராவிட மாடல் என்பது ஒரு மாடல். மாடல் என்பது உதாரணம். கொலை நடப்பது, கஞ்சா பிடிப்பது போன்றவை திராவிட மாடல். ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். பாஜகவின் முதலாளியாக அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் மேஸ்திரி.

ஈழத்தமிழர்கள் குறித்து அமித்ஷா, மோடி தெரிவிக்க வேண்டும். 8 ஆண்டுகளாக வாய் திறக்காத அவர்கள். இப்போது என்ன தெரிவிப்பார்கள். அண்ணாமலைக்கு ஈழத்தின் மேல் திடீர் பாசம் வந்துள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் கடவு சீட்டு வழங்க வேண்டும்.

திபெத், பாகிஸ்தான், வங்காளதேசம், இந்துக்களுக்கு, சீக்கியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறார்கள். இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஏன் குடியுரிமையை மறுக்கிறீர்கள்.

மூத்த திமுக அமைச்சர் செய்தியாளர்களை ஒருமையில் பேசியதை தவிர்த்திருக்கலாம். நபிகள் நாயகம் குறித்து பேசியது அவசியமற்றது. இந்தியா இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளோடு, வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் போது, வளைகுடா நாடுகள் எண்ணைய் வழங்குவதை நிறுத்தி விட்டால் பெட்ரோல் டீசல் விலை ஏறும். கட்சியை விட்டு நீக்கியது திரும்பப் பெறுவது போன்றது தேவை இல்லாதது. இதுபோன்ற நிலைமைத் தொடர்ந்தால் நாம் தனிமைப்படுத்தப்படுவோம். இந்தியாவின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். உயிரிழப்பை பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வரும் அந்த விளையாட்டை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வுடன்பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதி குறித்துப் பேசும் அரசு பட்டியல் இனத்தவர்களை இழிவாக பேசுபவர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவால் வரும் வருமானத்தால் மட்டுமே அரசு நிர்வாகம் நடக்கிறது. அரசு கடனில் உள்ளது. பொருளாதார குழு அமைத்து ஓராண்டு ஆகி என்ன மாற்றுப் பொருளாதார திட்டத்தை செயல்படுத்தினார்கள்..?

மக்கள் வாழ்விடங்களை இடிப்பது, பசுவிற்கு மடம் கட்டுவது, உயிரிழந்த கோவில் யானைகளுக்கு மண்டபம் கட்டுவது போன்றவை திராவிட மாடலில் வருகிறது. பரிகாரம், ஐதீகத்திற்காக பதவியில் நீடிப்பதற்காக ஜோசியரின் பேச்சுகளைக் கேட்டு இதுபோன்று செயல்படுகிறார்கள். தீட்சிதரால் அவமதிக்கப்பட்ட அமைச்சர் சேகர்பாபு பதவி விலகி விடுவாரா..? என நகைச்சுவையுடன் சீமான் தெரிவித்தார்.

Views: - 629

0

0