ராணுவ வீரர் கொலை… திமுகவுக்கு எதிராக களமிறங்கிய பாஜக : அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 6:58 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக ஆட்சியிலே, சட்டம் ஒழுங்கின் நிலை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

குற்றவாளிகளின் கரத்திலே இருக்க வேண்டிய விலங்குகள் காவல்துறையின் கைகளுக்கு போடப்பட்டு இருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் இனப் பிரிவின் தலைவர் திரு தடா பெரியசாமி அவர்களின் இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இது போன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்க வேண்டி, காவல் உயர் அதிகாரியிடம், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தாக்குதலும், இழப்பும் நேரிட்ட பிறகு பாதுகாப்பு வழங்கி என்ன பயன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மதுவினால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும், அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை இலாபத்திற்காக, மக்களை மதுவிற்கு அடிமைகளாக, இந்த திமுக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசி இருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், சரளமாக கிடைக்கிறது. வயது வித்தியாசம் இன்றி சின்னஞ்சிறார்களும் அதை எளிதாக பெற முடிகிறது.

இந்த கேவலங்களுக்கு பெயர்தான் திராவிட மாடலா? இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் 21.02.2023 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை, திராவிட மாடல் இருளை போக்கும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

முன்னதாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக் கொன்ற திமுகவை கண்டித்து, அதே பிப்ரவரி 21ஆம் தேதி அன்று காலை ஒன்பதரை மணி அளவில் ஆடம்ஸ் சாலை என்னும் சிவானந்தா சாலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலே, ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது. மத்திய அரசின் மகத்தான திட்டங்களை எல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று எண்ணமில்லை.

ஆனால், மக்களை ஏமாற்றி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திமுகவின் அனைத்து மட்டத்திலும் மேலோங்கி இருக்கிறது. தமிழக மக்கள் எல்லாம், ஆட்சியாளர்களையும் அவர்களின் அத்துமீறல்களையும் அராஜகங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு உணர்த்துவதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம். தமிழக மக்களுக்கான இந்த அறப்போராட்டத்தில், கலந்து கொண்டு இந்த அறப்போராட்டத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலே வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!