காங்கிரசுக்கு கல்தா?…ஸ்டாலின் பேச்சால் அரசியலில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 6:49 pm
DMK congress - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு, தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்!!

5 நாள் மாநாடு என்றாலும் கூட நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது, நான்காம் நாள்தான். ஏனென்றால் அன்று மத்திய-மாநில அரசு உறவுகள் என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு ஆவேசமாக பேசியதை கேட்க முடிந்தது.

Image

2024 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று மம்தா பானர்ஜி சந்திரசேகரராவ், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் நடத்திய இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் புகழாரம்

மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, “கேரளாவின் முதலமைச்சராக பினராயி விஜயன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்ல, மாநில முதலமைச்சர்களில் இரும்பு மனிதராகவும் உள்ளார். ஒரு மாநிலத்தின் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார்.

Image

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு. இந்த வேற்றுமையுடன்தான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். இதை விட ஆபத்தானது, வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆளுநர்கள் மூலமாக ஆட்சி நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை இருக்கும்போது, ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்லவா? இதனை ஒரு மத்திய ஆட்சியே செய்யலாமா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாகத் தனியாட்சி நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சியா?

Image

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதித்து வருகிறார். நாள் கடத்தி வருகிறார். நீட் மசோதா மட்டுமல்ல 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இருக்கின்றன.

அதற்கெல்லாம் அவர் அனுமதி தரமறுப்பதற்கு என்ன காரணம்?… எட்டு கோடி மக்களை விட நியமன ஆளுநருக்கு அதிகாரம் வந்துவிடுகிறதா? இப்படித்தான் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் நடக்கிறது என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

மாநில சுயாட்சிக்காக நாம் போராடுவோம் உண்மையான கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம். சிவப்பு வணக்கம் தோழர்களே!…” என்று முழங்கினார்.

கம்யூனிஸ்ட் மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர்!!

மார்க்சிஸ்ட் நடத்திய இந்த மாநாட்டில் கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமசும் கலந்துகொண்டு டெல்லி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்தார். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அவர் பங்கேற்கலாம் என்பதை அறிந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மார்க்சிஸ்ட் கருத்தரங்கில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

Image

அதையும் மீறி கம்யூனிஸ்ட் மாநாட்டில் கே வி தாமஸ் கலந்து கொண்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோனியாவுக்கு மாநிலத் தலைவர் அவசர கடிதமும் எழுதி இருக்கிறார்.

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும் ராகுலும் அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

அதிருப்தியில் சோனியா, ராகுல்

இதுதொடர்பாக டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, ” பினராயி விஜயன் நாட்டிலேயே மிகச் சிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார். இரும்பு மனிதர் போலவும் இருக்கிறார். மத்தியில் பாஜக அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதோடு ஸ்டாலின் நிறுத்திக் கொண்டிருக்கலாம்.

Sharad Pawar and Bhupinder Hooda should inspire Congress, also lead it  beyond the dynasty | The Indian Express

மாநில சுயாட்சிக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம். சிவப்பு வணக்கம் தோழர்களே!… என்று கம்யூனிஸ்டுகளுடன் மிகுந்த நெருக்கம் காட்டியதைத்தான் சோனியா, ராகுல் இருவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்கின்றனர்.

ஆட்சி கலைப்புக்கு காரணம் காங்கிரஸ்தான்

தவிர கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி கலைக்கப்பட்டதையும், தமிழகத்தில் திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டதையும் சுட்டிக் காண்பித்து மாநாட்டில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இந்த ஆட்சி கலைப்புகள் எல்லாமே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடத்தப்பட்டவை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் திமுகவின் சமீபகால அரசியல் நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Image

கடந்த 2-ம் தேதி டெல்லியில் நடந்த திமுகவின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவின்போதும் தங்களுக்கு அளித்த வரவேற்பை விட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மிகுந்த மரியாதை தரப்பட்டதாக காங்கிரஸ் கருதுகிறது.

திமுகவின் முகமாக மாறிய காங்., பிரமுகர்

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களிலேயே கூட பீட்டர் அல்போன்ஸ் போன்ற ஒரு சிலர், “கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான். எதிர்வரும் தேர்தலில் அவருடைய வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நல்ல பலன் கிடைக்கும். பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்” என்று திமுக தலைவர்கள் போல கடந்த சில மாதங்களாகவே பேசி வருகின்றனர். அவர்களைப் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காததால்தான் தற்போது கேரளாவிலும் காங்கிரசுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தாமஸ் வெளிப்படையாகவே செயல்படுகிறார்.

Congress Senior Peter Alphonse New Chairman Of Tamilnadu Minorities  Commission | Indian Express Tamil

இன்னும் சொல்லப்போனால், கம்யூனிஸ்ட்களை மதிக்கும் அளவிற்கு கூட காங்கிரசை திமுக மதிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பாஜகவுடன் 190 நாடாளுமன்ற தொகுதிகளில் நேருக்கு நேர் மோத தகுதி வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் திகழும்போது தங்களை விட்டு விலகிச் செல்வதற்காக திமுக திட்டமிட்டே இப்படி செய்கிறதோ என்ற சந்தேகம் சோனியா, ராகுல் இருவரிடமும் எழுந்திருக்கிறது.
இதற்கு இன்னொரு காரணம் திமுக கூட்டணியில் பாமக சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதுதான். தங்களது கூட்டணியில் பாமக இணைந்தால் தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்?

மேலும் டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமான டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியதையும் ராகுல் ரசிக்கவில்லை என்கிறார்கள். அதனால்தான் திமுக அலுவலக திறப்பு விழாவில் ராகுல் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் நடத்திய மாநாட்டில் ஸ்டாலின் திடீரென்று பங்கேற்று பேசி இருப்பதும் காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

DMK chief Stalin urges Rahul Gandhi not to quit as Congress president- The  New Indian Express

அதனால் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுவதற்கு முன்பாக, நாமே முதலில் வெளியேறி விடலாமா என்ற சிந்தனையும் காங்கிரஸ் தலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

11 மசோதா குறித்து விளக்கம் தராத முதலமைச்சர்

11 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதற்கான காரணத்தை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பின்பு, அந்த மசோதாக்களின் விவரம் குறித்து ஸ்டாலின் கம்யூனிஸ்ட் மாநாட்டில் விரிவாக விளக்கமளித்து இருந்தால் அதில் உள்ள சிக்கல்கள் வெளியே தெரிய வந்திருக்கும். ஆனால் அது பற்றி தமிழக முதலமைச்சர் எதுவும் பேசவில்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த ஆண்டின் இறுதியில் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றிலும், அடுத்த ஆண்டு மத்தியில் கர்நாடக மாநிலத்திலும் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே காங்கிரஸ் தலைமை 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்!

Views: - 780

0

0