தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம்…தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அறிவிப்பு..!!

Author: Rajesh
27 January 2022, 9:35 am

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி குடியரசு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்ட போது சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற அலுவலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது என்று சில அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் சில ஊழியர்களின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எம்பி கனிமொழி, அமைச்சர் மனோதங்கராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஊழியர்களின் இந்த அடாவடி போக்கை கண்டித்து இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!