திவாலாகி விட்டதாக அறிவித்த சர்க்கரை ஆலை… அதிர்ச்சியில் விவசாயிகள் : தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 6:52 pm
Anbumani - Updatenews360
Quick Share

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருமண்டங்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை, வங்கிகளுக்கு ரூ.150 கோடி கடன், உழவர்களுக்கு ரூ.125 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்த நிலையில் கடந்த 2018-19-ம் ஆண்டில் திவாலாகி விட்டதாக அறிவித்தது.

திவால் அறிவிப்பு வெளியான பிறகு தான் அந்த ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடலூர் மாவட்டத்தில் ரூ.90 கோடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.360 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

ஒருபுறம் வங்கிகள் உழவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கு தீவிரம் காட்டும் நிலையில், ஆலை நிர்வாகத்தைக் கைப்பற்றிய மத்திய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம், அதை கால்ஸ் டிஸ்ட்டில்லரீஸ் என்ற நிறுவனத்திற்கு சில மாதங்களுக்கு முன் விற்பனை செய்து விட்டது.

புதிய ஆலை நிர்வாகம், உழவர்கள் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் சுமையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால், இப்போது அந்தக் கடனை உழவர்கள் தான் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தாங்கள் மிகவும் தந்திரமாக ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விவசாயிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தங்கள் பெயரில் வாங்கப்பட்ட கடனை திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் புதிய நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.125 கோடியை வட்டியுடன் வசூலித்துத் தர வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். நவம்பர் 30-ந் தேதி தொடங்கிய போராட்டம் இரு மாதங்களைக் கடந்தும் நீடிக்கிறது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து காப்பாற்றும்படி உழவர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு தீர்வு தான் கிடைக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், இந்த விவகாரம் இப்போதைக்கு தீர்க்கப்பட வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்தக் கட்டமாக தொழில்துறை செயலாளர் முன்னிலையில் இத்தகைய பேச்சுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அது ஒன்று தான் இந்த சிக்கலுக்கு தீர்வை வழங்கும். எனவே, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Views: - 98

0

0