இஸ்ரோவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்… இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 11:58 am

இஸ்ரோவுக்கு முழு ஒத்துழைப்பு தமிழக அரசு கொடுக்கும்… இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!!!

சென்னை பாடியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

மேலும், எதிர்வரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினேன். இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

சிறிய ரக ராக்கெட்டுகளை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ முடியும். தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினம் தான் சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவ சரியான இடம்.

இரண்டு வருடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது என கூறினார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள், இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது.

இதனால் அதிகசெலவு ஏற்படுகிறது. குலசேகரப்பட்டினத்தில் ஏவப்படும் விண்கலங்கள் நேரடியாக விண்வெளியை சென்றடையும் எனவும் தெரிவித்தார். மேலும், இஸ்ரோவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருகிறது.

அதன்படி, குலசேகரப்பட்டினம் திட்டத்திற்கு தமிழக அரசு உதவியாக இருக்கிறது. விண்ணிற்கு மனிதர்களை அனுப்புவது அவ்வளவு எளிதல்ல, அது பெரும் முயற்சி என்றார்.

இதனிடையே பேசிய அவர், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் உலகின் முதல் நிலை வீரராக வருவதற்கு நாம் அனைவரும் பிராத்திக்க வேண்டும். பிரக்ஞானந்தா எங்களுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் நிலவில் சாதித்ததை, அவர் பூமியில் சாதித்து உள்ளது பெருமையாக உள்ளது எனவும் கூறினார்

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?