பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியது திட்டமிட்ட கூட்டுச்சதி.. என்ஐஏ விசாரணை தேவை : அண்ணாமலை வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
10 February 2022, 11:53 am

சென்னை : பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வு ரத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தமிழக பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருப்பதாக பாஜக கருதிகிறது. நீட் விவகாரத்தில் பாஜக நிலைப்பாட்டை எதிர்ப்பதாக கைது செய்யப்பட்டவன் வாக்குமூலம் என போலீசார் கூறுகின்றனர். ரவுடியின் வாக்குமூலம் என போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. நீட் என்பதற்கு என்ன அர்த்தம் என கைதான ரவுடிக்கு தெரியுமா..? என நமக்கு தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘எக்ஸ்’ பிரிவுக்குக் கொண்டுபோனார்கள். என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. உடனிருக்கும் ஆட்களை வைத்து கண்காணிக்கிறார்கள்

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய தலைவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகள் வீச்சு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணை சீர்குலைந்து போனதற்கு இதுவே உதாரணம், எனக் கூறினார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!