தமிழகத்தில் 150% வரை சொத்துவரி கிடுகிடுவென அதிகரிப்பு… இந்த விலை உயர்வு உடனே அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவிப்பு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 9:02 am
Quick Share

மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ உள்ள நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ 600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும்‌, 601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 5௦ சதவீதமும்‌, 1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவீதமும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

வணிகப்‌ பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ வரி உயர்த்தப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில்‌…

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌ சொத்து மதிப்பு 2022-23-ஆம்‌ நிதியாண்டில்‌ உயர்த்தப்படுகிறது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின்‌ அறிக்கையின்படி, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதியில்‌ 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும்‌, சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ 25 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது.

சென்னையில்‌ 600-1200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1201-1800 சதுர அடி குடியிருப்புகளுக்கு 100 சதவீதமும்‌, 1801 சதுர அடிக்கு உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 150 சதவீதமும்‌ உயர்த்தப்படும்‌. சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ 600-1200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும்‌, 1201-1800 சதுர அடிகுடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1801 சதுர அடிக்கு மேலுள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 100 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது.

சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, சென்னையோடு 2011-இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழில்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம்‌ சொத்து வரியை உயர்த்தவும்‌ குழு பரிந்துரைத்துள்ளது.

மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை ஏற்று, அரசு அதனை செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சொத்து வரி உயர்வு , 2022-2023-ஆம்‌ ஆண்டிற்கான முதலாம்‌ அரையாண்டு முதல்‌ மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைவிட குறைவு: தற்போது, தமிழ்நாட்டில்‌ உள்ள மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ நடைமுறையில்‌ உள்ள சொத்து வரியானது, நாட்டிலுள்ள பல்வேறு மாநகரங்கள்‌ மற்றும்‌ நகரங்களுடன்‌ ஒப்பிடுகையில்‌ மிகவும்‌ குறைவாக உள்ளது.

எனவே, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளைப்‌ பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப்‌ பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின்‌ தீர்மானம்‌ பெற்று சொத்து வரி சீராய்வை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 944

0

0