28,000 சத்துணவு மையங்களை மூட திட்டமா? இது தமிழக அரசுக்கு நல்லதல்ல… முடிவை கைவிடுங்க… எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 1:59 pm
Quick Share

சென்னை ; தமிழகத்தில் 28,000 சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சத்துணவு திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும்.

தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குனர் நேற்று முன்நாள் சென்னையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் தான் சத்துணவு மையங்கள் மூடப்படுமோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும்; அவை அனைத்தையும் இன்று காலை 11 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் ஆணையர்களுக்கு சமூகநலத்துறை ஆணையிட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 3 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதன் நோக்கம், 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து கொண்டு சென்று வழங்குவதாகத் தான் இருக்க வேண்டும். இது தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்கச் செய்யும்; சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்து விடும்.

சத்துணவுத் திட்டத்தின் முதன்மையான நோக்கங்களில் குறிப்பிடத்தக்கது மாணவர்களுக்கு சூடான உணவை, சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது தான். பள்ளி வளாகத்தில் சமைத்து வழங்குவதன் மூலம் மட்டும் தான் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும். உணவை சூடாக உட்கொள்ளும் போது அது செரிமானத் திறனை அதிகரிக்கிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது; உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துகள் உடலில் முழு அளவில் கலப்பதை உறுதி செய்கிறது; உணவில் பாக்டீரியா போன்றவை உருவாவதைத் தடுக்கிறது. ஆனால், ஏதோ ஓரிடத்தில் உணவை தயாரித்து பல கி.மீ தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் போது உணவு ஆறி விடக்கூடும். ஆறிய உணவு சத்துணவின் நோக்கத்தை நிறைவேற்றாது. அதுமட்டுமின்றி, ஓரிடத்தில் தயாரித்து பல இடங்களுக்கு உணவை கொண்டு செல்லும் போது சுகாதாரத்தை பேணுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

சத்துணவு பணியாளர்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும் போது, ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அந்த பள்ளிகளில் உணவு வழங்கும் பொறுப்பு பள்ளியில் பணியாற்றும் ஏதேனும் ஒரு பணியாளரிடம் ஒப்படைக்கப்படலாம். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும்.

ஒருபுறம், காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் தமிழகத்தில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால், காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும், அந்தந்த பள்ளிகளில் சமைத்து வழங்கும் வகையில் விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சமூக நலத்துறை, அதை விடுத்து சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டங்களை வகுப்பது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது.

எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 85

0

0