பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு… ஒரு வாரம் டெல்லியில் தங்கி காய் நகர்த்தும் ஆளுநர் ஆர்என் ரவி..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 1:04 pm

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இருவருக்கும் இடையே அதிகாரம் சார்ந்த போட்டி உருவாகியுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டினால் அதனை திரும்பப் பெற்றார்.

மேலும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், இதுபோன்ற கோப்புகள் குறித்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று அந்த கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதையடுத்து, ஆளுநர் தங்களின் கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்களை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

இதனிடையே, ஆளுநர் என்பவர் அரசியல்வாதி இல்லை என்றும், அரசியல் பேசக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றடைந்தார். ஒரு வாரப் பயணமாக டெல்லியில் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவிருக்கும் அவர், முதற்கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!