நிலுவை தொகை பாக்கியால் தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு ஏற்படுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 12:40 pm
Quick Share

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், தமிழகத்தில் மின்வெட்டும் அபாயம் உள்ளதா…? என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள திருமாநிலையூர் பகுதியில், நேற்று துவங்கி வரும் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா தமிழக அரசின் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை துவக்கி வைத்தார்.

இந்த புத்தக கண்காட்சியில் 115 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் அங்கு விற்பனைக்கும், பார்வையாளர்களின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மத்திய அரசு இந்தியாவில் உள்ள தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி தொகையை செலுத்தாததால், புதிதாக மின் விற்பனை மற்றும் கொள்முதல் செய்யக்கூடாது எனது தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படுமோ? என்ற அச்சம் நிலவியது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நடப்பு மாதத்திற்கு 924 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டி உள்ளது. ஆயினும் தமிழக அரசு முறைப்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளது. இன்னும் 70 கோடி மட்டுமே செலுத்த வேண்டி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள மின்னணு போர்ட்டலில் தமிழக அரசு செலுத்திய தொகை அதில் காண்பிக்கப்படவில்லை. இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கி விடுமுறையாக உள்ளதால் வரும் திங்கட்கிழமை செலுத்த வேண்டிய மீதி 70 கோடியை தமிழக அரசு செலுத்தி விடும்.

இதனால் தமிழக மக்களும், ஊடகவியலாளர்களும் எவ்வித குழப்பமும் ஏற்படுத்திட வேண்டாம். தமிழகத்தில் சீரான மின்மினியோகம் தொடர்ந்து நடைபெறும், என தெரிவித்தார்.

Views: - 571

0

0