மேகதாது விவகாரம்.. ஆட்சிக்கு தகுந்தாற் போல நாடகமாடும் திமுக அரசு.. ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 10:57 am

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக எந்த கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கிறதோ, அதை பொறுத்து திமுகவினர் பேசுவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் வருகை தந்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு நெல்லை மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாநகர காவல் துறை சார்பில் காவல் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநருக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்ததாவது:- அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள நாட்டில் பொதுச் சிவில் சட்டம் சமூகநீதி தேவை என்பதற்காகவே கொண்டு வரப்படுகிறது.

பொதுச் சிவில் சட்டம் ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என ஒரு சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட பொதுச் சிவில் சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த காலகட்டத்திற்கு அவசியமானது. பொது சிவில் சட்டம் எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மீகம் இந்தியாவில் வளர்கிறது. எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மலைவாழ் மக்கள் இன்னும் முழுமையாக முன்னேறவில்லை. அவர்களுக்கான உரிமைச் சட்டம் இருக்கிறது. பொது சிவில் சட்டத்திலிருந்து மலைவாழ் மக்களுக்கு சில விழக்குகள் அளிக்கப்படலாம்.

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சனை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது, என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் 40 எம்எல்ஏக்கள் வெளியேறிய சம்பவம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, இது முற்றிலும் அரசியல் சார்ந்த கேள்வி. இது குறித்து நான் பதில் அளிக்க முடியாது. பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை, எனக் கூறினார்.

கேஸ் விலை உயர்வு தொடர்பாக பாண்டிச்சேரியில் அமைச்சர் ஒருவர் முற்றுகையிடப்படுகிறார் என்ற கேள்விக்கு, பாண்டிச்சேரியில் 300 ரூபாய் மானியமாக கேஸ்க்கு வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படுகிறது. முற்றுகை சம்பவம் எது போன்ற சூழலில் நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை, என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!