‘திமுகவில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்ல’.. போராட்டத்தின் போது திமுக பெண் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு.. மேடையில் வெடித்த கோஷ்டி மோதல்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 2:38 pm

தென்காசி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்டச் செயலாளருக்கும், மகளிர் அணியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது, தென்காசியில் திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தாங்கள் மணிப்பூர் சம்பவத்தை குறித்து பேச வேண்டாம் என மாவட்ட கழக செயலாளர் எதிராக மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மகளிர் அணியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், மாவட்ட கழக செயலாளர் எதிராக மாவட்ட பஞ்சாயத்து தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மேடையில் இருந்து தமிழ்ச்செல்வி அப்புறபடுத்தப்பட்டார். மகளிர் வன்கொடுமையை எதிர்த்து போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் போது, தென்காசியில் திமுகவில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என வாக்குவாதம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என இருதரப்பு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!