தஞ்சை மாணவி தற்கொலை… கைதான விடுதி காப்பாளருக்கு ராஜமரியாதை கொடுத்த திமுக எம்எல்ஏ… Cm ஸ்டாலினுக்கு புதிய தலைவலி!!!

Author: Babu Lakshmanan
15 February 2022, 12:15 pm
Quick Share

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளரை திமுக எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் கிறிஸ்துவ விடுதியில் தங்கிப்படித்த மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிரிழப்பிற்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், திமுக ஆட்சியில்தான் மதமாற்ற நிகழ்வுகள் அதிகமாக இருப்பதாகவும், மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க மறுப்பது ஏன்..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, விடுதி காப்பாளர் சகாய மேரி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பொன்னாடை போர்த்தி வரவேற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திமுகவினரை பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தை பகிரிந்த பாஜக ஆதரவாளர் மாரிதாஸ், “மாணவி லாவண்யாவிற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் லாவண்யா சாவுக்குக் காரணமான மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி பிணையில் வெளியில் வரும் சகாயமேரியை திமுக எம்எல்ஏ சிறைக்குச் சென்று பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்! திருந்த வேண்டியது இந்து சமூகம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் மரணத்தில் திமுக பெயரளவில் மட்டுமே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக எம்எல்ஏவின் செயல், மதமாற்றத்திற்கு ஆதரவு அளிப்பது போன்று இருப்பதாக பாஜகவினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 373

0

0