தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்… அனல் பறந்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 6:58 pm
Udhay
Quick Share

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்… அனல் பறந்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவு..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது.

பிரச்சாரம் முடிவடைந்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரச்சார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் வெளிநபர்கள் தங்கவில்லை என்பதை விடுதி நிர்வாகிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்னதாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல்பறக்க இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: ₹1000 உரிமைத் தொகை வேணுமா? பெண்களே தயாராக இருங்க : வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை..!

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். இரவில் தனியாக பேய்ப்படம் பார்த்தவர்கள் கூட, இரவில் மோடி டிவியில் பேசப்போகிறார் என்றால் பயப்படுகின்றனர் என்று கூறி வாக்குகளை சேகரித்தார்.

சேலத்தில், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை வாகனப் பேரணி நடத்தி தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, திமுக மற்றும் பாஜக பற்றி தனது விமர்சனங்களையும் தங்கள் கட்சி வாக்குறுதிகளை முன் வைத்து மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று இறுதி கட்ட தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “நான் அல்லது நீ இருக்க வேண்டும், இதைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அரசியல் களத்தினுள் நுழைந்து விடக்கூடாது என்பதில், இரு திராவிட கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன” என்றார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக திமுகவின் திட்டங்களை எடுத்துக்கூறி சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

Views: - 96

0

0