நீட் விலக்கு மசோதா…குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ரவி உறுதி: தமிழக அரசு அறிக்கை..!!

Author: Rajesh
15 March 2022, 1:52 pm

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நீட் விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது.

Image

இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். கடந்த 2021ம் ஆண்டு செப்டெம்பர் 13ம் தேதி நீட் விலக்கு தொடர்பான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Image

ஆனால் 142 நாட்களுக்கு பின்னர் அந்த மசோதாவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி திருப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவிற்காவது ஆளுநர் உரிய முடிவை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆளுநர் அது தொடர்பாக எந்த நிலைப்பாட்டில் உள்ளார் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. 


அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதி  ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக  கவர்னரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.


மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!