தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.. சட்டப்படி நடவடிக்கை எடுங்க : அன்புமணி வாய்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 10:49 am

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.. சட்டப்படி நடவடிக்கை எடுங்க : அன்புமணி வாய்ஸ்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55,000 ஏக்கர் நிலங்கள் கருகி பாலையாகி விடும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது எவ்வாறு சட்ட விரோதமோ, அதேபோல் தான், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதும் குற்றம் ஆகும்.

மேலும் படிக்க: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.. தனிப்படை அமைத்து கைது செய்த போலீஸ்.. கோவை மக்கள் நிம்மதி!

ஆனால், இதை உணராமல், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பதைப் போலவே கேரளமும் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

காவிரி துணை ஆறுகள் மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயன்றால், அதை முதலில் அறிந்து தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை வாயைத் திறக்கவே இல்லை.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது.

திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள். கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?