இயக்குனர் வெற்றிமாறன் கிளப்பிய ‘இந்து’ மத சர்ச்சை… பிரிவினைவாதம் பேசுகிறாரா…? திசை திருப்பும் நாடகமா…?

Author: Babu Lakshmanan
5 October 2022, 6:07 pm
Quick Share

பா.ரஞ்சித், ஜோதிகாவுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்படும் ஒரு கோவில் ஒன்று உண்டு என்றால் அது தஞ்சை பெரிய கோவிலாகத்தான் இருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மா மன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் அமைப்பு இன்றளவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், அந்தக் கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் பற்றி பேசும்போது, அவனது ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது. அவனுடைய ஆட்சி பொற்காலம் அல்ல, இருண்ட காலம் என்று ஏக வசனத்தில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கண்டனத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அதன்பின்பு நடிகை ஜோதிகா, ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசும்போது, “தஞ்சை பெரிய கோவிலுக்கு நன்கொடை கொடுப்பதை விட அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அன்பளிப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்” என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அடுத்து வெற்றிமாறன்

இவர்கள் இருவரும் வைத்த விமர்சனங்களே தமிழக மக்களிடம் இருந்து இன்னும் நீங்காத நிலையில் அடுத்ததாக திரைத்துறையை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் மிக அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளில் பேசிய அவர் “சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் ‘கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை’ என்றார்கள். மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.

தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நமது விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கடைசியாக வெற்றிமாறன் கூறிய சில வாக்கியங்கள் பாஜகவை மனதில் வைத்துதான் என்பதை யூகிக்க முடிகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கும் நிலை உருவானது.

பாஜக எதிர்ப்பு

இதனால் கொந்தளித்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா “சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்’ என்று மறைமுகமாக வெற்றிமாறனை சாடினார்.

Hraja_UpdateNews360

பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் “ராஜராஜசோழன் இந்து இல்லை என்று சொல்பவன் ‘முட்டாள்’! நம்புகிறவன் ‘காட்டுமிராண்டி’! பரப்புபவன் அயோக்கியன்!” என கோபமாக கொப்பளித்தார்.

ஆதரவு

அதேநேரம் வெற்றி மாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, சினிமா இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், “சிவனும், முருகனும், இந்துக்கள் அல்ல அவர்கள் சைவர்கள். சோழர்களை இந்துக்களாக அடையளப்படுத்துவதை அனுமதிக்க கூடாது என என் தம்பி வெற்றி மாறன் பேசியிருப்பது பெருமையாக உள்ளது” என தெரிவித்து இருக்கிறார்.

Angry Seeman - Updatenews360

நடிகர் கருணாஸ், கூறும்போது, “இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து மிக உண்மையானது. சரியானது! ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது!”என்று
குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் பதிவில், “ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ,வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும், அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானம். சினிமா உட்பட எந்தக் கலைவடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இயக்குனர் வெற்றிமாறன் கருத்து சரியானதே” என்று கூறியுள்ளார்.

யார் இந்துக்கள்..?

பாஜகவின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனது கண்டன அறிக்கையில், “உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், இந்து வழிபாடு பற்றியும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து கடவுள்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன.

தமிழ் நிலம் என்பது ஆன்மிக பூமி. இந்து பூமி. சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களும், விஜயநகர பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் கட்டிய 30 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன.

இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழித்து ஒழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சான ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழன் இந்து அல்ல என்பது.

இது கண்டனத்திற்குரியது. இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க, ராஜராஜ சோழன் போன்ற சோழ, சேர, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம்” எனக்
கூறி இருக்கிறார்.

இயக்குனர் பேரரசு, “ராஜராஜ சோழன் இந்து சமயத்தை சேர்ந்தவர்தான். சாமி பற்றி பேசிவிட்டால் என்னை சங்கி என்கிறார்கள்” என ஆதங்கப் படுகிறார்.

சர்ச்சையை கிளப்புவது ஏன்..?

“மா மன்னன் என்று வரலாற்றில் போற்றப்படும் ராஜராஜ சோழன் பற்றி, இயக்குனர் வெற்றிமாறன் திடீரென எதற்காக இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த காட்சிகளை வைத்து அவர் இப்படிப் பேசி இருக்கலாம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் கலைத்துறையின் மூலம் அரசியல் ரீதியாக இதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும் என்று அவர் கூறுவதைப் பார்த்தால் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி பெறுவது அவருடைய கண்களை உருத்துகிறதோ என்றும் கருதத் தோன்றுகிறது.

அதிலும் சம்பந்தமே இல்லாமல் அவர் திராவிடத்தை இணைத்து பேசுவதுதான் இப்படி சந்தேகப்பட வைக்கிறது. குறிப்பாக 1956-ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திராவிடம் என்ற ஒரு பகுதியே என்பதே நாட்டில் இல்லாத நிலையில், எதற்காக வெற்றி மாறன் அப்படி சொல்கிறார்? என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு, தமிழர்களின் பெருமை என்று கூறியிருந்தால் கூட அது ஏற்புடையதாக இருந்திருக்கும். மாறாக திராவிடம் என்கிற சித்தாந்தத்தை அவர் தாங்கிப் பிடிக்கிறார். இதனால் ஏதோ ஒரு பிரதான அரசியல் கட்சியின் நிர்வாகி பேசுவது போலவே அவருடைய கூற்று உள்ளது.

தவிர கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் அவருக்கு இப்போது திடீரென இந்த ஞானோதயம் எப்படி தோன்றியது என்பதும் புரியாத புதிராக உள்ளது. எனவே, தான் அனுதாபம் கொண்டுள்ள கட்சியின் கருத்தியலை அவர் வெளிப்படுத்துகிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சமீபகாலமாக தனித் தமிழ்நாடு பற்றி பொதுவெளியில் பரபரப்பாக பேசி வரும் ஒரு கட்சியின் முன்னணி தலைவர் இந்துக்களை மிகவும் இழிவாக விமர்சித்தார். அதற்காக அவர் பலத்த எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியதாயிற்று. அவர் தெரிவித்த கருத்து இந்துக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால் அதை திசை திருப்பும் நோக்கில் தற்போது வெற்றிமாறனும் அரசியல் கலந்து பேசுவது மாதிரி தெரிகிறது.

ஏனென்றால் தனது பரபரப்பு பேச்சு மூலம், இந்துக்கள் பற்றி அவதூறாக கூறிய தலைவரின் கருத்து தானாகவே மறைந்துவிடும் அல்லது மறக்கடிக்கப் பட்டுவிடும் என்று அவர் நினைத்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, தான் மறைமுகமாக சார்ந்திருக்கும் கட்சிக்காக இப்படிப் பேசுவதை நிறுத்திவிட்டு அவர் வெளிப்படையாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும். தனது கருத்துக்களை சொல்ல முன்வர வேண்டும். இல்லையென்றால் வெற்றி மாறனின் பேச்சு பிரிவினைவாதத்தை மட்டுமே மனதில் வைத்து பேசப் பட்டதாகவே அனைவராலும் அர்த்தம் கொள்ளப்படும்.

ராஜ ராஜசோழன் கட்டிய, தஞ்சை பெரிய கோவில் இன்றைய, நவீன கால விஞ்ஞான தொழில் நுட்பத்தையும் மிஞ்சியதாக உள்ளது. இதுபோன்ற கோவிலை இனி யாராலும் கட்ட முடியாது என்கிற அளவிற்கு அதன் அற்புதமான வடிவமைப்பும் இருக்கிறது.

உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் இந்தியாவில் பிறந்த ஒரு இந்து மன்னனால் கட்டப்பட்டது என்று உலக வரலாற்றில் பதிவாவதை திராவிட சித்தாந்தம் பேசுவோர் விரும்புவதில்லை. அதனால்தான் தஞ்சை பெரிய கோவிலையும், அதை கட்டிய ராஜராஜ சோழனையும் அவ்வபோது தமிழ் திரைப்படத் துறை பிரபலங்கள் சர்ச்சைக்குரிய விஷயமாக பேசுகிறார்கள்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் காரணம் கூறுகின்றனர்.

Views: - 437

0

0