அமலாக்கத்துறையால் ஏற்பட்ட இலாகா மாற்றம்… செந்தில் பாலாஜி கவனித்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றிய தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 2:22 pm

2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் கிட்டதட்ட 17 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனையானது நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மது மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!