ஆசிரியர்களின் குரலை நசுக்கி கைது செய்ய முயற்சி… நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக : அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 8:26 pm
Condemned -Updatenews360
Quick Share

ஆசிரியர்களின் குரலை நசுக்கி கைது செய்ய முயற்சி… நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக : அண்ணாமலை கண்டனம்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் என மூன்றுவகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.

இது வரை அரசு சார்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், ஆசிரியர்கள் ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில், பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களுக்கு இத்தனை ஆண்டு காலம், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

கடந்த தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல், “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவின் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைக், கைது செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி மூலம் அறிந்தேன், இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டு, தற்போது ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியப் பெருமக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 331

0

0