திமுக ஆட்சியில் தூர்வாரும் பணியில் மெகா முறைகேடு…? எல்லாமே அரைகுறை… பகீர் கிளப்பிய டிடிவி தினகரன்!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 2:24 pm

திமுக ஆட்சியில் தூர்வாரும் பணியில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஆட்சியின் போது தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருவதாகவும், புதிதாக எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு வாங்கியதில் முறைகேடு, மின்சாரத்துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் திமுக எதிர்கொண்டது.

இந்த நிலையில், நீர்நிலைகள் தூர் வாரியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளால் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரிலேயே தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டுகின்றன.

டெல்டாவின் மற்ற பல இடங்களிலும் தூர்வாரும் பணி முழுமையடையவில்லை. எனவே, தூர்வாருதலில் பெரிய அளவு முறைகேடு நடந்திருக்கலாம் என மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விளக்கத்தை தி.மு.க அரசு அளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!