கோவை நகை கொள்ளை சம்பவத்தில் திருப்பம் : ‘தீரன்’ பட பாணியில் வடமாநிலத்தில் தமிழக போலீசார் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 8:49 pm
Cbe Police - Updatenews360
Quick Share

கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கள் திருடு போனது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர்.

அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின் தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னனி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்ற போது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர்.
தமிழில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வரும் காட்சியைப் போல், சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

Views: - 390

0

0