சனாதன வழக்கில் திருப்பம்.. உதயநிதியின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2024, 2:21 pm

சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும் போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசியல் சாசனம் அளித்த கருத்து சுதந்திர உரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்கிறீர்கள்.

நீங்கள் ஒரு மாநிலத்தின் அமைச்சர். பொறுப்பு உணர்ந்தும் பின்விளைவுகள் குறித்து யோசித்தும் பேச வேண்டும் என காட்டமாக கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. பிற மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்ற முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பிற மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் அனைவரும் நவம்பர் 18-ந் தேதி முன்னதாக பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!